தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி பா.ம.க. வேட்பாளர் அன்புமணி ராமதாஸ். கடகத்தூர் என்ற பகுதியில் அன்புமணி ராமதாஸ் காரில் சென்றிருக்கிறார். அவரைப் பார்த்த அங்கிருந்த சிறுவர்கள் அன்புமணியின் காரின் பின்னாலேயே ஓடி வந்துள்ளனர். இதைக் கண்ட அவர், காரை நிறுத்தி விட்டு சிறுவர்களிடம் சென்று இவ்வாறு ஓடி வரக் கூடாது என அறிவுரை கூறியுள்ளார்.
இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் அன்புமணியை உற்சாகத்துடன் வரவேற்று கோஷங்களை எழுப்பினர். இந்த திடீர் வரவேற்பை எதிர்பாராத அன்புமணி உள்ளத்தால் நெகிழ்ந்துபோனார். பின்னர் மக்கள் முன்னிலையில் பேச வந்த அவருக்கு நா தழுதழுத்தது. என்னை வரவேற்ற உங்களுக்கு வாழ்க்கை முழுவதும் நன்றிக் கடன் பட்டிருக்கிறேன் என்று கூறுவதற்கு முன்பாக அன்புமணியின் கண்களில் இருந்து கண்ணீர் வடிந்தது.
அப்போது கூட்டத்தில் இருந்த தொண்டர்கள் அழாதீர்கள், அழாதீர்கள் என்று கூச்சலிட்டனர். தனது கண்ணீரைக் கட்டுப்படுத்த மைக் சுவிட்சை அணைப்பதுபோல் தலையைக் குனிந்து கொண்டார் அன்புமணி. ஆனாலும் அவரது முகத்தில் அழுகையின் பிரதிபலிப்பு தெரிந்தது.
இந்த வீடியோ சமூக வலைதளத்தில் பரவி வருகிறது. இதுகுறித்து எதிர்க்கட்சியினர், அதிமுகவை கடுமையாக விமர்சித்துவிட்டு அவர்களுடனேயே கூட்டணி வைத்ததை பலரும் விரும்பவில்லை. தோல்வி பயத்தில் இப்படி அழுகிறார் என்கின்றனர். பாமகவினரோ, அவர் ஓட்டுக்காக அழவில்லை. கட்சியினரை சந்தித்த உணர்ச்சியில் அழுதுவிட்டார் என்றனர்.