நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறது.
இதனையொட்டி அண்மையில் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக கு. செல்வப்பெருந்தகை நியமிக்கப்பட்டார். இதற்கான அறிவிப்பை காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் வெளியிட்டிருந்தார். இது குறித்து காங்கிரஸ் கட்சி சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், ‘தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக கு. செல்வப்பெருந்தகை நியமனம் செய்யப்பட்டுள்ளார். எஸ். ராஜேஷ் குமார் தமிழ்நாடு சட்டப்பேரவை காங்கிரஸ் குழு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராகப் பொறுப்பு வகித்து வந்த கே.எஸ். அழகிரியின் பங்களிப்புகளைக் காங்கிரஸ் கட்சி பாராட்டுகிறது’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், பிரபல பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் ஊடக தொடர்புத்துறை தலைவர் பதவியில் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை காங்கிரஸ் கட்சியின் தமிழக மேலிடப் பொறுப்பாளர் அஜோய் குமார் வெளியிட்டுள்ளார். முன்னதாக இந்த பதவியில் கோபண்ணா செயல்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் துணைத் தலைவர்களாக கோபண்ணா, ஸ்வர்ண சேதுராமன் ஆகியோர் நியமிக்கப்படுகின்றனர். அதேபோன்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளர்களாக டி. செல்வம், கே. தணிகாசலம், அருள் பெத்தையா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார்.