நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.
இந்த நிலையில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தேசிய ஜனநாயக கூட்டணியுடன் இணைந்து ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடுகிறார். இந்தியா கூட்டணி சார்பில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் வேட்பாளர் நவாஸ் கனி போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் ஜெயபெருமாள் போட்டியிடுகிறார். இந்த நிலையில்தான் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் என்ற பெயரில் மேலும் 4 சுயேட்சை வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
இந்த நிலையில் முன்னால் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட 3 பேர் சுயேட்சை சின்னமான வாளி சின்னத்தை கோரியிருந்த நிலையில், குலுக்கல் முறையில் வாளி சின்னம் வேறு ஒரு பன்னீர்செல்வத்திற்கு ஒதுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தற்போது முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு பலாப்பழம் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதேபோன்று இந்திய ஜனநாயக புலிகள் கட்சி சார்பில் வேலூர் தொகுதியில் நடிகர் மன்சூர் அலிகான் போட்டியிடுகிறார். இந்த நிலையில் நடிகர் மன்சூர் அலிகானுக்கும் பலாப்பழச் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது. இருவரும் வெவ்வேறு தொகுதியில் போட்டியிடுவதால் ஒரே சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.