தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் பேச்சுக்களால், அதிமுக - அண்ணாமலை இடையே கருத்து மோதல் ஏற்பட்டு, அதிமுக - பாஜக கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அதிமுக தலைமை அலுவலகத்தில் கடந்த 25 ஆம் தேதி (25.09.2023) மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பாஜகவுடன் கூட்டணியை முறித்துக் கொள்ள வேண்டும் என அதிமுகவின் பெரும்பாலான மாவட்டச் செயலாளர்கள் வலியுறுத்தியதாகவும், அதேசமயம் கட்சியின் 2 ஆம் கட்ட தலைவர்களில் ஒரு தரப்பினர் பாஜகவுடன் கூட்டணியைத் தொடர வேண்டும் என்று வலியுறுத்தியதாகவும் தகவல் வெளியாகி இருந்தது. இவ்வாறு மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் காரசார விவாதம் நடந்து வந்த நிலையில், பாஜகவுடன் கூட்டணி இல்லை என அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் அதிகாரப்பூர்வமாக முடிவெடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அதிமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.
இந்நிலையில் அதிமுக - பாஜக இடையே கூட்டணியில் முறிவு ஏற்பட்ட நிலையில், பாஜக உடனான கூட்டணி குறித்து தனது அணி நிர்வாகிகளுடன் சென்னையில் உள்ள தனியார் விடுதியில் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில், ஓ. பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த வைத்திலிங்கம், பண்ருட்டி ராமச்சந்திரன், மனோஜ் பாண்டியன், மருது அழகுராஜ், புகழேந்தி ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர். ஆலோசனைக்குப் பிறகு பாஜக கூட்டணியில் தங்கள் அணி தொடர்கிறதா என்பது குறித்து அறிவிக்க உள்ளார். இது குறித்து ஆலோசனை நடத்திய பிறகு செய்தியாளர்களைச் சந்தித்துத் தனது முடிவை அறிவிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.