!["All the money added to the police department is gone" - Annamalai interviewed](http://image.nakkheeran.in/cdn/farfuture/R1Iim2mgawPN6blVhP2c99K6zzIKgA9Q0ioTfZXAFyI/1679230495/sites/default/files/inline-images/n223981.jpg)
நேற்று முன்தினம் சென்னை அமைந்தகரையில் பாஜக மாநில நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய அண்ணாமலை, பாஜக தமிழ்நாட்டில் வளர திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி வைக்கக்கூடாது என்று பேசியதாகச் சொல்லப்படுகிறது. அவர் தனது மாநிலத் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாகப் பேசியதாகவும் சொல்லப்படுகிறது. தனித்து நிற்பது தொடர்பான பேச்சுக்கு வானதி சீனிவாசன், நாராயணன் திருப்பதி, பாஜக சட்டமன்ற குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அண்ணாமலை நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், ''கட்சிக்குள் எங்கள் தலைவர்கள் இருக்கும் பொழுது பேசிய சில கருத்துக்கள் ஊடகங்களில் விவாதமாகி உள்ளது. கட்டுக்கோப்பான இயக்கம் பாஜக. என்னுடைய எண்ண ஓட்டங்கள் சிலவை என்னுடைய மனதில் இருக்கிறது. ஒரு கட்சியின் தலைவராக இருந்தாலும் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஒரு கிளீன் பாலிடிக்ஸ் செய்வதற்கான நேரம் வந்துவிட்டது என நம்பிக்கை இருக்கிறது. அதற்கான அச்சாரம் பணம் கொடுக்காமல் தேர்தலை சந்திப்பது.
பணம் கொடுத்து தேர்தலை சந்தித்து விட்டால் உன்னதமான அரசியல் செய்து விட்டோம் என்று சொன்னால் மக்கள் எள்ளி நகையாடுவார்கள். தமிழக அரசியல் தேர்தல் களத்தில் பணம் இல்லாமல் தேர்தலை சந்திக்க முடியாது என்ற நிலை வந்து விட்டது. எனக்கு அதில் உடன்பாடு இல்லை. தனி மனிதனாகவும் உடன்பாடு இல்லை, பாஜக தொண்டனாகவும் உடன்பாடு இல்லை, பாஜகவின் மாநில தலைவராகவும் அதில் உடன்பாடு இல்லை. இதில் நான் உறுதியாக இருக்கிறேன். எந்த கட்சிக்கும் எதிராக நான் இல்லை. எல்லா கட்சிகளுமே அவர்களுக்கு என்ன சரி என்று நினைக்கிறார்களோ அதை செய்கிறார்கள். அது அவரவர்கள் கட்சிக்கு விட்டது. அவர்கள் அரசியல் செய்யும் நிலைப்பாட்டை தப்பு என்று சொல்லும் உரிமை எனக்கு இல்லை. அரசியலுக்கு வந்த நேரத்தில் அரவக்குறிச்சி தொகுதியில் நானும் போட்டியிட்டேன். அரசியலில் என்ன நடக்கும் என்று தெரியாத நேரம் அது. தேர்தல் யுக்திகள் தெரியாத நேரம். ஆனால் இன்று இரண்டு வருடம் முடிந்த பிறகு என்னுடைய மனசை நான் ஒருநிலைப்படுத்திக் கொண்டு வந்து விட்டேன். அதை என்னுடைய தலைவர்களிடமும், தொண்டர்கள் கிட்டயும் பேச ஆரம்பித்துள்ளேன்.
நான் காவல்துறையில் 9 ஆண்டுகள் சம்பாதித்த அத்தனை பணமும் அவரக்குறிச்சி தேர்தலில் போய்விட்டது. அவையெல்லாம் குருவி சேர்ப்பது போல் நான் சிறுக சிறுக சேர்த்து வைத்தது. டீசல் போடனும், பெட்ரோல் போடனும் என்று எல்லாம் செலவாகிவிட்டது. எலக்சன் முடிந்தவுடன் நான் சத்தியமாக கடனாளியாக தான் இருக்கிறேன். இந்த நேரத்தில் மறுபடியும் ஒரு பாராளுமன்றத் தேர்தலை சந்திக்க வேண்டும் என்றால் இந்திய அரசியல் களத்தில் ஒரு பாராளுமன்ற தேர்தலை சந்திக்க 80 கோடி ரூபாயிலிருந்து 120 கோடி ரூபாய் வரை செலவு பண்ண வேண்டும் என்பது பொதுவான கணக்கு. இதை செய்து விட்டு இங்கு கிளீன் பாலிடிக்ஸ் என்று பேச முடியாது''என்றார்.