பாரதிய ஜனதா கட்சி சார்பில் 1988 கோவை தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி கோவை ஆர்.எஸ்.புரம் டி.பி.சாலையில் நடைபெற்றது. 20ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சியை முன்னிட்டு, மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மத்திய கயிறு வாரிய தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், இந்து முன்னணி மாநில தலைவர் காடேஷ்வரா சுப்ரமணியம் ஆகியோர் பங்கேற்றனர். அப்போது பேசிய பொன்.ராதாகிருஷ்ணன், தமிழகம் அமைதி பூங்காவாக இல்லை. ஆட்சியில் உள்ளவர்கள் அதை புரிந்துக்கொள்ள வேண்டும். அடுத்தாண்டு அஞ்சலி கூட்டதிற்காவது மாநில அரசு அனுமதி ஆணை பிறப்பிக்க வேண்டும் என்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எடப்பாடி அரசு ஒராண்டை நிறைவு செய்ததே சாதனை. இக்கட்டான சூழ்நிலையில் ஓராண்டு ஆட்சியை நிறைவு செய்ததற்கு வாழ்த்துக்கள். சுப.உதயகுமாருக்கு அமலாக்கத்துறையினர் நோட்டிஸ் அனுப்பிய விவகாரம் தொடர்பாக பொது மேடையில் விவாதிக்க தயார். தமிழக அரசு சுப.உதயகுமாரிடம் கவனமாக இருக்க வேண்டும். துறைமுகம், நெடுவாசல், கூடங்குளம் என தமிழகத்திற்கு வரும் திட்டங்களை எதிர்ப்பது தவிர எந்த திட்டங்களை வரவேற்றுள்ளனர்.
தமிழகத்தில் கிழக்கு, தெற்கு, வடக்கு மாவட்டங்கள் வளர்ச்சி என்பது இல்லை. மேற்கு மாவட்டங்களின் வளர்ச்சியாவது காப்பாற்றிக்கொள்ள வேண்டும். மத்திய அரசாங்கம் கொடுக்கும் நிதியை கொடுக்க மாட்டோம் என மாநில அரசு சொன்னால் அது மக்களுக்கு செய்யும் துரோகம். ஆட்சி செய்வதற்கு அருகதை அற்றவர்கள் என்றார்.
மேலும், எய்ம்ஸ் மருத்துவமனை தமிழகத்திற்கு முன்கூட்டியே வந்திருக்க வேண்டிய திட்டம் எனவும், மருத்துவமனை அமைக்கும் இடம் தொடர்பாக தமிழக அரசு தெளிவான முடிவு எடுத்து பிறகு மத்திய அரசிடம் தெரிவிக்க வேண்டும் என்று வலியுருத்தியுள்ளார்.