அதிமுகவில் ஒற்றைத் தலைமை தொடர்பான பேச்சுவார்த்தைகள் முரண்பாடுகளை ஏற்படுத்திய நிலையில் தற்போது எடப்பாடி அணி எனவும், ஓபிஎஸ் அணி எனவும் அதிமுக பிரிந்து கிடக்கிறது. இந்த சூழலில் தமிழக சட்டப்பேரவை கூட்டம் இன்று துவங்கியது. எடப்பாடி பழனிசாமி தரப்பில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியிலிருந்து ஓபிஎஸ் நீக்கப்பட்டு ஆர்.பி.உதயகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் சட்டப்பேரவை அலுவல் கூட்டத்தில் எதிர்க்கட்சித் துணைத் தலைவராக ஆர்.பி.உதயகுமாரை அனுமதிக்க வேண்டும் என எடப்பாடி தரப்பு சட்டப்பேரவை செயலருக்கு கடிதம் எழுதியுள்ளது. அதேபோல் ஓபிஎஸ் தரப்பும் கடிதம் எழுதி இருக்கிறது.
இந்நிலையில் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று துவங்கியது. எதிர்கட்சித் துணைத் தலைவருக்கான இருக்கையில் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அமர்ந்தார். சட்டப்பேரவை கூட்டம் முடிந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “அதிமுக சார்பாக எங்களது ஜனாநாயகக் கடமைகளை நிறைவேற்றுவதற்காக சட்டமன்றக் கூட்டத்தொடரில் கலந்து கொண்டோம்’ எனக் கூறியிருந்தார்.
மேலும் எதிர்க்கட்சித் துணைத்தலைவர் இருக்கை பன்னீர்செல்வத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் இன்றைய சட்டப்பேரவைக் கூட்டத்தொடரை புறக்கணித்துள்ளனர். இதற்கு எதிர்க்கட்சித் துணைத்தலைவர் இருக்கை பன்னீர்செல்வத்திற்கு ஒதுக்கியது ஒரு காரணம் என சொல்லப்படுகிறது.
மேலும் இது குறித்து எடப்பாடி தரப்பு அதிமுகவினர், எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கை பன்னீர்செல்வத்திற்கு ஒதுக்கியது ஒரு காரணம் என்றாலும் அதிமுக பொன்விழா ஆண்டு நிகழ்வில் கலந்து கொள்வதால் சட்டப் பேரவையில் கலந்து கொள்ளவில்லை எனக் கூறுகின்றனர். அதிமுகவை பொறுத்தவரை 65 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். அதில் 61 சட்டமன்ற உறுப்பினர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.