நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறது.
இத்தகைய சூழலில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் இல்லத்தி்ல் பா.ஜ.க. - த.மா.க. இடையே கூட்டணி குறித்துப் பாஜக நாடாளுமன்றத் தேர்தல் பொறுப்பாளர் அரவிந்த் மேனன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது பாஜக மாநில துணைத் தலைவர்கள் கரு. நாகராஜன், நாராயணன் திருப்பதி மற்றும் பால் கனகராஜ் உள்ளிட்ட பா.ஜ.க. நிர்வாகிகளும் உடன் இருந்தனர். அதனைத் தொடர்ந்து புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி. சண்முகத்துடனும் கூட்டணி குறித்து அரவிந்த் மேனன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த ஏ.சி. சண்முகம் பேசுகையில், “வாஜ்பாய் காலத்தில் இருந்து இன்று வரை 23 ஆண்டு காலமாக புதிய நீதிக் கட்சி தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வருகிறது. பா.ஜ.க.வின் தாமரை சின்னத்தில் புதிய நீதிக் கட்சி போட்டியிடும். போட்டியிடக் கூடிய தொகுதிகளை விரைவில் அறிவிக்க இருக்கிறார்கள்” எனத் தெரிவித்தார். மேலும் பாஜகவுடன் கூட்டணியில் உள்ள அரசியல் கட்சித் தலைவர்களான பாரிவேந்தர், தேவநாதன் யாதவ், தமிழருவி மணியன் ஆகியோரையும் பாஜக நாடாளுமன்றத் தேர்தல் பொறுப்பாளர் அரவிந்த் மேனன் சந்தித்து பேச உள்ளார்.
இந்நிலையில் மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க. கூட்டணியை பா.ம.க., தே.மு.தி.க. ஆகிய கட்சிகள் புறக்கணிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதே சமயம் பா.ம.க., தே.மு.தி.க. அதிமுக கூட்டணியில் இணைய வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. முன்னதாக விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்துள்ள தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் உடன் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் இரண்டு முறை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின் போது மக்களவைத் தேர்தலுக்கான கூட்டணி குறித்து இருவரும் பேசியதாகத் தகவல்கள் வெளியாகி இருந்தன. அதே போன்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரமலதா விஜயகாந்தை கூட்டணி குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி சந்தித்துப் பேசி இருந்தது குறிப்பிடத்தக்கது.