Skip to main content

''கறுப்பர் கூட்டத்தின் அரசியல் சதியை முறியடிப்போம்!” -பொங்கிய பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி!

Published on 16/07/2020 | Edited on 16/07/2020
admk minister rajendrabalaji pressmeet

 

“மதக் கலவரங்களை தூண்டிவிடும் செயலில் ஈடுபட்டுள்ள கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலின் பின்னணியில் அரசியல் சதி இருக்கிறது..” என்று அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, இன்று விருதுநகரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தபோது கூறினார்.

 

“உலகமே கரோனா வைரஸ் தாக்குதலால் பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றது. உதவி செய்கின்ற சூழ்நிலையில், கரோனா வைரஸானது, அனைத்து மதங்களையும் மனிதநேயத்துடன் ஒன்றிணைத்துள்ளது. இந்துக்கள் மரணமடைந்தால் இஸ்லாமியர்கள் கலந்துகொண்டு உடல் அடக்கம் செய்கின்றனர். இஸ்லாமியர்கள் மரணமடைந்தால் இந்துக்கள் கலந்து கொண்டு உடல் அடக்கம் செய்கின்றனர். இந்த நேரத்தில் கறுப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனல்,  மதவாரியாக மக்களைப் பிரிக்கும் செயலில் ஈடுபட்டுள்ளது. கருப்பர் கூட்டத்திற்கு பின்னால் ஒரு அரசியல் சதி இருக்கிறது. அந்த சதியை இந்த அரசு முறியடிக்கும். யூடியூப் சேனலில் தவறாக பதிவு செய்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மதக்கலவரங்களை உருவாக்குவதற்காகவே அந்த கருப்பர் கூட்டம் யூடியூப் சேனல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. எந்தக் கடவுள்களையும் இழிவாக பேசுவது,  காண்பிப்பது கண்டிக்கத்தக்கது.

 

பிரச்சனைகள் வராதா என்று காத்திருக்கும் கூட்டம்தான் திமுக கூட்டம். திமுக தலைவர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் தகுதியை ஏற்கனவே இழந்துவிட்டார். தமிழகத்தில் சிறப்பாக ஆட்சி நடத்திவரும் எடப்பாடியார் ஆட்சியை வசைபாடும் ஸ்டாலினை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. தினமும் ஒரு அறிக்கை என்ற அடிப்படையில் அதிமுக அரசு மீது ஸ்டாலின் பொய்யான தகவல்களைக் கொடுத்து அரசியல் செய்து வருகின்றார். 16 மணி நேர மின் தடையை ஏற்படுத்தி,  தமிழகத்தை இருளில் மூழ்கடித்த திமுகவுக்கு, மின் கட்டணத்தை காரணமாக வைத்து போராட்டம் நடத்த தகுதி கிடையாது. பத்து ஆண்டுகள் ஆகிவிட்டது; மக்கள் மறந்து விட்டார்கள் என்று ஸ்டாலின் நினைத்து கொண்டிருக்கிறார். திமுக ஆட்சியில் நடைபெற்ற அவலநிலையை மக்கள் மனதில் வைத்துக்கொண்டுதான், ஆண்ட கட்சியே மீண்டும் ஆளுகின்ற வாய்ப்பை தமிழக மக்கள் அதிமுகவிற்கு கொடுத்துள்ளனர்.

 

admk minister rajendrabalaji pressmeet

 

அம்மாவுக்கு பிறகு எடப்பாடியார் சிறப்பான ஆட்சியைக் கொடுத்து வருகின்றார். தமிழகத்தில் பிரச்சனைகளை உருவாக்கி, ஸ்டாலின் அரசியல் செய்து வருகின்றார். தமிழக மக்கள் மீதும் தமிழ் மீதும் பாரத பிரதமர் மோடி மிகப்பெரிய மரியாதை வைத்துள்ளார். தமிழுக்கு எதிராக மோடி ஒரு கணமும் செயல்பட மாட்டார். ஸ்டாலினுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. ஆகையால் மத்திய, மாநில அரசை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றார்.

 

விருதுநகர் மாவட்டத்தில் கரோனா பாதிப்பை கட்டுப்படுத்த தமிழக முதல்வர் எடப்பாடியார் உத்தரவிற்கிணங்க, பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சென்னையில் முதலில் கரோனா தொற்று அதிகமாக இருந்தது. தற்போது படிப்படியாக குறைந்து வருகின்றது. வெளி மாவட்டங்களில் இருந்து வந்தவர்களால்தான், விருதுநகர் மாவட்டத்தில் கரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. லாக்டவுனை தொடர்ந்து நடைமுறைப்படுத்தினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுகின்றது. ஆகையால், தேவைப்படும் பகுதியில் லாக்டவுன் செய்யப்படுள்ளது.  

 

சிலர் போலியான சங்கத்தை வைத்துக்கொண்டு ஆவின் நிர்வாகத்தை பற்றி குறைகூறி வருகின்றனர். கரோனா பாதிப்பு வந்தததில் இருந்து, கடந்த 4 மாதங்களில் எங்கும் ஆவின் பால் தட்டுப்பாடு கிடையாது. தனியார் பால் கம்பெனிகள் அனைத்தும் மூடிவிட்டுச் சென்றுவிட்டனர். தனியார் பால் கம்பெனிகளுக்கு பால் ஊற்றியவர்களிடம், அவர்களது நலன் கருதி ஆவின் நிர்வாகம் பால் வாங்கி வருகின்றது. இதனால் 33 லட்சம் லிட்டர் கொள்முதல்,  இன்று 40 லட்சம் லிட்டராக உயர்ந்துள்ளது. அதன் காரணமாக, பாலை பவுடர் ஆக்கி வி்ற்பனை செய்து வருகின்றோம். கரோனா வைரஸ் தொற்று காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் வகையில் இஞ்சி, எலுமிச்சை, துளசி, மிளகு, சீரகம், பெருங்காயம், கருவேப்பிலை, கொத்தமல்லி ஆகிய நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் பொருட்களை சேர்த்து புதிய மோரை ஆவின் தயாரித்துள்ளது.  இதன் விற்பனையை,  தமிழக முதல்வர் தொடங்கி வைத்துள்ளார். தற்போதுகூட சிங்கபூருக்கு ஆவின் பால் ஏற்றுமதி செய்து வருகின்றோம். விவசாயிகளின், அடித்தட்டு மக்களின் கஷ்டங்களைத் தெரிந்த காரணத்தினால்,  ஒவ்வொரு திட்டத்தையும், பயன்பெறும் வகையில் எடப்படியார் அரசு செயல்படுத்தி வருகின்றது. விருதுநகர் மாவட்டத்திற்கு மருத்துவக் கல்லூரி வராது என்று சொன்னார்கள் ஆனால் கொடுத்த வாக்குறுதிப்படி,  மருத்துவக் கல்லூரியை கொண்டு வந்துள்ளோம் தற்போது 40 சதவீத பணிகள் முடிவடைந்து விட்டன. திமுக ஆட்சி போன்று,  திட்டங்களை அறிவித்துவிட்டு கிடப்பில் போடுவது கிடையாது. ஏழை,  எளிய மக்கள் நன்மைக்காக திட்டங்களைத் தீட்டி, சட்டங்களை இயற்றி, மக்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்கும் பணியில் எடப்பாடியார் அரசு சிறப்பாக செயல்பட்டு வருகின்றது. எதிர்கட்சிகள் குறித்து பொருட்படுத்தாமல், எங்களுடைய கவனம் மக்கள் நன்மைக்கானதாகவே இருக்கும். இந்த ஆட்சிதான் மீண்டும் ஆட்சி அமைக்கும், முதல்வர் எடப்பாடியார் மீண்டும் முதலமைச்சராக வருவார்.”  என்று கூறினார். 

 

 

சார்ந்த செய்திகள்