விருதுநகர் அதிமுக மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நீக்கப்பட்டுள்ளார்.தற்போது தமிழக அமைச்சரவையில் பால்வளத்துறை அமைச்சராக இருப்பவர் ராஜேந்திரபாலாஜி. இவர் விருதுநகர் மாவட்டத்தில் அதிமுக மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருந்தார். இந்நிலையில் அவரை மாவட்ட செயலாளர் பதவியிலிருந்து விடுவிப்பதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் ஓபிஎஸ் இபிஎஸ் ஆகிய இருவரும் தெரிவித்துள்ளனர். அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கட்சி பதவியில் நீக்கியது அதிமுகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நீக்கம் குறித்து விசாரித்த போது, சமீபத்தில் நடந்த துக்ளக் விழாவில், நடிகர் ரஜினிகாந்த் பெரியார் குறித்து கருத்து தெரிவித்து இருந்தார். அந்த கருத்துக்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் பலர் கருத்து கூறிவந்தனர். குறிப்பாக ரஜினி கருத்து தொடர்பாக தமிழக அமைச்சர்கள் பலர் பல்வேறு கருத்துகளை கூறிவந்தனர். அப்போது அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ரஜினி கருத்துக்கு ஆதரவாக கருத்து கூறியிருந்தார். அதோடு சமீப காலமாக பாஜக கருத்துக்கு ஆதரவாகவும், ரஜினியின் பல கருத்துக்கு ஆதரவாகவும் ராஜேந்திர பாலாஜி கருத்து தெரிவித்து வந்தார். மேலும் ரஜினியின் மக்கள் மன்றத்தினருடன் தொடர்பில் இருந்ததாகவும், ஒரு வேளை ரஜினி கட்சி ஆரம்பித்தால் ரஜினி கட்சியில் ராஜேந்திர பாலாஜி இணைய முயற்சி செய்யலாம் என்றும் அதிமுக தலைமைக்கு உளவுத்துறை ரிப்போர்ட் கொடுத்திருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. அதனால் ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி இந்த நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கலாம் என்றும் அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.