வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் புதுக்கோட்டை மாவட்டத்திற்கான அதிமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டதில் இருந்து போராட்டங்களும் தொடங்கியுள்ளன. இதில் ஆலங்குடி, அறந்தாங்கி தொகுதிகளில் அதிமுக தொண்டர்கள் உச்சகட்ட கொந்தளிப்பில் உள்ளனர். ஆலங்குடி தொகுதியில், 50 நாட்களுக்கு முன்பு காங்கிரஸ் கட்சியில் இருந்து அதிமுகவுக்கு வந்த தர்ம.தங்கவேலுவுக்கு வேட்பாளராக சீட்டுக் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதனை ஏற்காத அதிமுக தொண்டர்கள் இன்று (11.03.2021) காலை ஆலங்குடியில் கூடுவதற்கு நேற்று இரவே சமூக வலைதளங்கள் மூலம் அழைப்பு கொடுக்கப்பட்டள்ளதாக தெரிகிறது.
இன்று காலை கொத்தமங்கலம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திருமாறன் மகன் பாண்டியன் தலைமையில் 800க்கும் மேற்பட்டோர் திரண்டு, சந்தைப் பேட்டையில் இருந்து அதிமுக கொடி, எடப்பாடி பழனிசாமி, ஒபிஎஸ் படங்களுடன் இரட்டை இலை பொறித்த பதாகைகளுடன் ஊர்வலமாக முழக்கங்களை எழுப்பியபடியே பேருந்து நிலையம் நோக்கி பேரணி நடத்தினார்கள். பலர் இரட்டை இலை பதாகைகளைத் தூக்கி வீசிவிட்டுச் சென்றனர். இதனிடையில் ஒரு அதிமுக தொண்டர் தீக்குளிக்க முயன்றார். தீக்குளிக்க முயன்ற அத்தொண்டரை போலீசார் தடுத்து தண்ணீரை ஊற்றினார்கள். சேந்தன்குடியில் சிலர் அதிமுக கரை வேட்டியை உருவி சாலையோர பள்ளத்தில் வீசிச் சென்றுள்ளனர்.
அதேபோல புளிச்சங்காடு கைகாட்டியில் திரண்ட அதிமுக தொண்டர்கள், திடீர் சாலை மறியலில் ஈடுபட்டு ‘நேற்று வந்தவருக்கு சீட்டா? காலங்காலமாய் கட்சிக்காக உழைப்பவனுக்கு பட்டை நாமமா?’ என்று முழக்கங்களையும் எழுப்பினார்கள். இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அதேபோல அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதியில் அறிவிக்கப்பட்டுள்ள அதிமுக வேட்பாளர் ராஜநாயகத்தை மாற்ற வேண்டும் என வலியுறுத்தி அதிமுக தொண்டர்கள் ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வேட்பாளர்களை மாற்ற கட்சித் தலைமை முன்வர வேண்டும். மாற்றவில்லை என்றால் மாற்றும் வரை போராட்டம் தொடரும். பிறகு தேர்தலில் சுயேச்சைகளாக களமிறங்கி, கட்சி வேட்பாளர்களைத் தோற்கடித்து கட்சிக்குப் பாடம் புகட்டுவோம் என்கிறார்கள் ஆலங்குடி, அறந்தாங்கி தொகுதி ர.ர.க்கள். மேலும் மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளிலும் சுயேச்சையாக போட்டியிட புதிய வேட்பாளர்களையும் தேர்வு செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதிமுக வேட்பாளர்களை எதிர்த்து சுயேச்சையாக களமிறங்க உள்ள அதிமுக அதிருப்தி வேட்பாளர்கள் விராலிமலை தொகுதியில் வழக்கறிஞர் நெவளிநாதன், அறந்தாங்கி தொகுதியில் ஒ.செ. பிஎன்.பெரியசாமி, ஆலங்குடி பாண்டியன் ஆகியோரைக் களமிறக்கவும் ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிகிறது. இந்நிலையில் அதிமுக அதிருப்தியாளர்களைத் தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியில் அமமுகவும் காய் நகர்த்தி வருகிறது.