அதிமுக பொதுக்குழுவில் எடுக்கப்பட வேண்டிய முடிவுகள் குறித்து ஆலோசிப்பதற்காக நடத்தப்பட்ட கூட்டத்தில் ஓபிஎஸ், இபிஎஸ் ஆதரவாளர்களுக்கிடையே நடந்த மோதல்களால் மீண்டும் அதிமுக உடையப் போகிறது என்கிறார்கள் அக்கட்சியின் சீனியர்கள்.
அதிமுக தலைமைக்கு எதிராக தர்மயுத்தம் நடத்தி கட்சியை உடைத்தவர் ஓபிஎஸ். பாஜக தலைவர்கள் எடுத்த முயற்சியில் மீண்டும் அதிமுகவில் இணைந்தார். இதனையடுத்து கட்சியின் சட்ட விதிகள் திருத்தப்பட்டு அதிகாரமிக்க பொதுச் செயலாளர் பதவியை நீக்கினர். அதற்கு பதிலாக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டு அவைகளின் முறையே ஓபிஎஸ், இபிஎஸ் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த இரட்டைத் தலைமைக்கு கட்சியின் பொதுக்குழுவும் தலைமைத் தேர்தல் ஆணையமும் ஒப்புதல் அளித்தது.
கட்சியின் ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸ் இருந்தாலும், எடப்பாடியின் ஆதிக்கமே கட்சிக்குள் இருந்து வந்தது. ஓபிஎஸ் ஓரங்கட்டப்பட்டார். அதற்கேற்ப கட்சியின் சீனியர்களும் மா.செ.க்களும் எடப்பாடிக்கு ஆதரவாக நின்றனர். ஓபிஎஸ்சும் மனப்புழுக்கத்திலே இருந்தார். அவரால் எடப்பாடியை எதிர்க்க முடியவில்லை. ஆட்சியை இழந்த நிலையிலும் எடப்பாடி தனது அதிகாரத்தை கட்சிக்குள் நிலை நிறுத்திக்கொண்டே வருகிறார்.
இந்த நிலையில் தான், கட்சி தேர்தலை நடத்தி வருகிறது அதிமுக. இதனை வைத்து, கட்சிக்குள் ஒற்றைத் தலைமையை ஏற்படுத்த வேண்டும்; மீண்டும் பொதுச் செயலாளர் பதவியை உருவாக்க வேண்டும்; அந்த பதவியில் 'தான்' உட்கார வேண்டும் என்று காய்களை நகர்த்தி வந்தார் எடப்பாடி.
இந்த சூழலின் பின்னணியில்தான், தேர்தல் ஆணைய விதிகளின்படி கட்சியின் பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தை 23-ந் தேதி கூட்ட ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் கூட்டாக அறிவித்தனர்.
அந்த கூட்டத்தில் எடுக்கப்பட வேண்டிய முக்கிய முடிவுகளைப் பற்றி விவாதிக்க இன்று ஆலோசனை கூட்டம் நடத்தினர். குறிப்பாக, ஒற்றைத் தலைமையை உருவாக்க வேண்டும் என எடப்பாடி ஆதரவாளர்கள் வலியுறுத்தினர். இதற்கு ஓபிஎஸ் தரப்பினர் கடுமையாக எதிர்த்தனர். இதனால், கூட்டத்தில் ஏகத்துக்கும் சலசலப்பு உருவானது. மோதல்கள் வெடிக்கும் சூழல். இறுதியில் ஓபிஎஸ்சும் அவரது தரப்பும் அமைதியானது. ஒற்றைத் தலைமைக்கான முடிவை எடுத்திருக்கிறார்கள்.
பொதுக்குழு உறுப்பினர்கள் 2,645 பேரில், பெரும்பான்மை எண்ணிக்கை எடப்பாடி தரப்பிடமே இருக்கிறது. இந்த பெரும்பான்மையை வைத்து, தன்னை பொதுச் செயலாளராக பொதுக்குழு அங்கீகரிக்க வேண்டும் என்பதற்காக அனைத்து சூழ்ச்சிகளையும் செய்து முடித்து விட்டார் எடப்பாடி பழனிச்சாமி. இதற்காக, பொதுக்குழு உறுப்பினர்கள் மட்டுமே பொதுக்குழுவில் அனுமதிக்கப்பட வேண்டும் என்பதற்காக அவர்களுக்கு புகைப்படம் ஒட்டிய அடையாள அட்டையை வழங்க வேண்டி மா.செ.க்களுக்கு அறிவுறுத்தினார் எடப்பாடி. அதனை சீனியர்களும் ஒப்புக்கொள்ள, ஓபிஎஸ் மட்டும் இதனை எதிர்த்தார். அத்துடன், சிறப்பு அழைப்பாளர்களை அழைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தினார் ஓபிஎஸ். சிறப்பு அழைப்பாளர்கள் எனில் சுமார் 4,000 பேர் அனுமதிக்கப்படுவர். அதில் 50 சதவீதத்துக்கும் அதிகமாக தனது ஆதரவாளர்களை பொதுக்குழுவுக்குள் கொண்டு சென்று விடலாம். அப்படி நடந்தால் பொதுக்குழுவில் ஏதேனும் எடப்பாடி தனக்கு ஆதரவாக மட்டுமே திட்டமிட்டால் தனது ஆட்களை வைத்து தடுக்கலாம் என யோசித்தே சிறப்பு அழைப்பாளர் பிரச்சனையை எடுத்தார் ஓபிஎஸ். ஆனால், இதனை எடப்பாடி தரப்பு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தது. இதனால் மீண்டும் மோதல் வெடிக்கும் சூழல் உருவானது.
ஓபிஎஸ், கூட்டம் முடிந்ததும் தனது ஆதரவாளர்களுடன் கட்சி தலைமையகத்திலிருந்து வெளியேறி தனது வீட்டுக்கு பறந்தார். ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். அதில், 'எடப்பாடியின் சூழ்ச்சியை வீழ்த்த வேண்டும்; ஒற்றைத் தலைமையை ஏற்கக் கூடாது' என ஓபிஎஸ்சிடம் அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். மேலும் கட்சியின் சட்ட விதிகளும் ஆராயப்பட்டுள்ளன.
இது குறித்து ஓபிஎஸ் தரப்பில் விசாரித்த போது, "பொதுச் செயலாளர் பதவி திருத்தப்பட்டு இரட்டைத் தலைமை உருவாக்கப்பட்ட போது, இருவரும் இணைந்தே முடிவுகளை எடுக்கும் அதிகாரம் வழங்கப்பட்டது. அதனால், எடப்பாடியும் அவரது ஆதரவாளர்கள் மட்டுமே சேர்ந்து சட்ட விதிகளை திருத்திட முடியாது. அப்படி எந்த முடிவை எடுத்தாலும் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் ஓபிஎஸ் எதிர்ப்புத் தெரிவித்தால், எந்த முடிவுகளும் செல்லாது. அதையும் மீறி பொதுக்குழுவில் எடப்பாடி சூழ்ச்சி செய்தால் அதை எதிர்த்து மீண்டும் தர்ம யுத்தம் நடத்துவார். அதனால், இப்போதைய நிலையில், அதிமுக மீண்டும் பிளவை நோக்கி நகர்கிறது" என்கிறார்கள்.