திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் காந்திராஜன் மற்றும் நத்தம் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் ஆண்டி அம்பலம் ஆகியோரை ஆதரித்து வடமதுரையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இதில் ஏராளமான கட்சித் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர். இந்தப் பிரச்சாரத்தில் பேசிய மு.க.ஸ்டாலின், “உதயசூரியனுக்கு வாக்குக் கேட்டு, உணர்வோடு, உரிமையோடு, உங்கள் வீட்டுப் பிள்ளையாக, உங்களில் ஒருவனாக வந்திருக்கிறேன்.
நத்தம் வேட்பாளர் ஆண்டி அம்பலத்தையும், வேடசந்தூர் திமுக வேட்பாளர் காந்திராஜனையும் ஆதரித்து வெற்றிபெற வைக்க வேண்டும். நத்தம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் நத்தம் விஸ்வநாதன் மீது பணம் பட்டுவாடா செய்து வழக்குப் பதிவு செய்துள்ளார்கள். அவர் எவ்வளவு பணம் கொடுத்தாலும் வாங்கிக் கொள்ளுங்கள், வேண்டாம் என்று சொல்ல வேண்டாம். ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்காகத் தொடர்ந்து பாடுபட்டு கொண்டிருப்பவன் இந்த ஸ்டாலின்.
ஜெயலலிதாகிட்ட கொள்ளையடித்தவர் நத்தம் விஸ்வநாதன். அவர் பணம் கொடுத்தால் வாங்கி கொள்ளுங்கள்; அது உங்கள் பணம். நான் 14 வயதில் அரசியலுக்கு வந்தவன். 10 ஆண்டு ஆட்சியை அகற்ற வேண்டும். தற்போது எடப்பாடி பழனிசாமி திமுக குறித்து பொய்யான பிரச்சாரம் செய்து வருகிறார். கடந்த 2006ஆம் ஆண்டு தேர்தலில் நிலம் தருவதாக திமுக வாக்குறுதி அளித்தது. அதன்படி ஒரு கோடியே 51 லட்சத்து 109 பேருக்கு இலவசமாக வழங்கியுள்ளோம். ஆனால், தற்போது நாங்கள் நிலங்களை வழங்கவில்லை என்ன பொய்யான பிரச்சாரத்தை பரப்பி வருகிறார். நாங்கள் நிலம் கொடுக்கவில்லை என முதல்வர் எடப்பாடி பழனிசாமி நிரூபிக்கத் தயாரா. வரக்கூடிய தேர்தலில் வெற்றிபெறுவது உறுதி. 100 நாட்களில் குறைகள் தீர்க்கபடும். பிரச்சினை தீரவில்லை என்றால், கோரிக்கை மனுவில் அடையாள சீட்டுடன் கோட்டைக்கு வந்து நேரடியாக முதல்வரை சந்திக்கலாம் என்ற திட்டம் அறிவித்துள்ளேன்.
‘100 நாளில் பிரச்சனை தீர்ப்பேன் என முக ஸ்டாலின் சொல்வது பொய். அது முடியாது’ என முதல்வர் பேசியுள்ளார். முதல்வருக்கு எதுவும் தெரியாது. பழனிசாமிக்கு தெரிந்தது எல்லாம் ஊழல்தான். கலைஞர் ஆட்சிக்கு வந்ததும் விவசாயக்கடன் ரூ.7000 கோடி தள்ளுபடி செய்தார். ஆட்சிக்கு வந்ததுடன் கலைஞர் டிவி வழங்கப்படும் என்று சொன்னார். சொன்னதைச் செய்தார். ஆனால், அதிமுக வழங்கிய பொருட்கள் அனைத்தும் காயலான் கடையில் உள்ளது. கலைஞர் வழங்கிய டிவி ஒவ்வொரு வீட்டிலும் உள்ளது. நீட் தேர்வு ரத்து செய்யப்படவில்லை. ‘திமுக ஆட்சிதான் நீட் தேர்வுக்கு காரணம்’ என அபாண்ட பொய்யை முதலமைச்சர் சொல்லி வருகிறார். கலலஞர் இருந்தவரை நீட் தமிழகத்தில் அனுமதிக்கப்படவில்லை, ஜெயலலிதா இருந்தபோதும் நீட் வரவில்லை. ஜெயலலிதா இறந்த பிறகு ஆட்சிக்கு வந்த பழனிசாமி ஆட்சியில் நீட் கொண்டு வரப்பட்டது. அதிமுக தேர்தல் அறிக்கையில் நீட் ரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பொதுமக்களை ஏமாற்றும் செயலாகும்.
சொன்னதைச் செய்தவர் கலைஞர். அவரது மகன் நான் இப்போது உறுதிமொழி தருகிறேன். ஆட்சிக்கு வந்ததும் உங்களது குறைகளை 100 நாளில் தீர்த்து வைப்பேன். ஆட்சி போகப்போகுது என்பதற்காக எது வேண்டுமானாலும் சொல்லாம். ரயில் தரேன், விமானம் தரேன், ஹெலிகாப்டர் தரேன் என வாய்க்கு வந்தபடி கூறலாம். விஷம்போல் விலைவாசி ஏறிக்கொண்டிருக்கிறது. அதைக் கட்டுப்படுத்த அதிமுக நடவடிக்கை எடுத்துள்ளதா? இந்த ஆட்சியில் பால், துவரம் பருப்பு, சிலிண்டர், விலைவாசி உயர்ந்துகொண்டே இருக்கிறது. மோடி அதிக வரி போடுகிறாரா, நான் அதிக வரி போடுகிறேனா என போட்டி நடக்கிறது. இந்தத் தேர்தலில் கதாநாயகன், கதாநாயகி இரண்டுமே திமுக தேர்தல் அறிக்கைதான். அதிமுக தேர்தல் அறிக்கை வில்லன். அதுவும் காமெடி வில்லன்.
திமுக தேர்தல் அறிக்கையைக் குடும்பத் தலைவிகளின் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக மாதம்தோறும் ரூபாய் ஆயிரம் வழங்கப்படும் என அறிவித்துள்ளேன். இதைப் பார்த்த எடப்பாடி பழனிசாமி 1,500 ஆக அறிவித்துள்ளார். திமுக தேர்தல் அறிக்கையைப் பார்த்து போட்டுள்ளார், ‘ஆண்டவன் சொல்றான் அண்ணாமலை செய்கிறான்’ அதேபோல ஸ்டாலின் சொல்றான், பழனிசாமி காப்பி அடிக்கிறார். பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும். அனைவரும் தடுப்பூசி போட்டுகொள்ள வேண்டும். கரோனாவை வைத்து கொள்ளையடித்த அரசு, எடப்பாடி பழனிசாமி அரசு. (முகக்கவசம், சானிடைசர், விளக்கமாறு) கிறிஸ்துவ வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். கழக ஆட்சி வந்தவுடன் பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும்” என்று பேசினார்.