மின் கட்டண உயர்வைக் கண்டித்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, செங்கல்பட்டில் அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, '' அதிமுக ஆட்சியில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை கொண்டுவந்து சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதன்பின் திமுக ஆட்சிக்கு வந்தது. ஆன்லைன் ரம்மி நிறுவனம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அப்பொழுது திமுக அரசு சார்பில் சரியான வாதங்கள் எடுத்துவைக்கப்படாததால் தீர்ப்பு ஆன்லைன் ரம்மி நிறுவனத்திற்கு சாதகமாக வந்துவிட்டது. ஆனால் இப்பொழுது இருக்கும் சட்டத்துறை அமைச்சர் நான்கு மாதத்தில் ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்கும் சட்டத்தை கொண்டுவருவோம் என்றார். ஆனால் நான்கு எட்டானது, எட்டு 12 ஆகி தற்பொழுது 15 மாதம் கடந்துவிட்டது இன்னும் அதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை. பலமுறை நாம் சொல்லியாச்சு. தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் சொல்லியாச்சு ஆனால் செவிடன் காதில் சங்கு ஊதன மாதிரி தமிழக முதல்வருக்கு நாம் பேசுகின்ற குரல் கேட்கப்படவில்லை.
இதிலும் வேடிக்கையானது ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய மக்களிடம் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்துறாங்கலாம். ஏங்க சூதாட்டத்திற்கு யாராவது கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தியது உண்டா? உலகத்திலேயே எங்கையும் கிடையாது. சூதாட்டத்திற்கு கருத்துக்கேட்க வேண்டும் என்று அறிவித்த ஒரே முதல்வர் தமிழக முதல்வர் ஸ்டாலின்தான். என்ன கருத்து கேட்பிங்க மூணு சீட்டில் விளையாடுறீங்களா,ஆறு சீட்டில் விளையாடுறீங்களா, 13 சீட்டில் விளையாடுறீங்களானா கருத்து கேட்பீங்க, இல்ல ஆன்லைன் ரம்மில விளையாண்டு பணத்தை இழந்தீர்களா? மனஉளைச்சல் அடைந்தீர்களா, காட்ட வித்தீங்களா, வீட்ட வித்தீங்களா, நடுரோட்ல நிற்கிறீர்களா இப்படியா கருத்து கேட்பு கூட்டம் நடத்தமுடியும். சிந்தனையே இல்லாத முதல்வர். அதனால்தான் பொம்மை முதல்வர் என்று சொன்னேன்'' என்று கடுமையாக விமர்சித்தார்.