Skip to main content

விஜயகாந்த்தை வைத்து திமுகவை விமர்சித்த அமைச்சர்... திமுக கொடுத்த பதிலடி!

Published on 04/10/2019 | Edited on 08/10/2019

நாங்குநேரி,விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு வேட்புமனு தாக்கல் முடிவடைந்து வேட்பாளர் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ள நிலையில், தற்போது பிரச்சார களத்தை தொட தயாராகி வருகிறது அந்த இரண்டு தொகுதிகளும். இந்த நிலையில் விக்கிரவாண்டி தொகுதியில் அமைச்சர் சி.வி.சண்முகம் திமுக தலைவர் ஸ்டாலின் குறித்து பேசியதற்கு, திமுக சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான பொன்முடி கண்டனம் தெரிவித்துள்ளார். கண்டனம் தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற தே.மு.தி.க. செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய சட்ட அமைச்சர் சி.வி. சண்முகம் "நிதானம்" தவறி "விஜயகாந்த் உடல்நிலை நன்றாக இருந்திருந்தால் எங்கள் தலைவர் அடையாளம் தெரியாமல் போயிருப்பார்" என்று அநாகரிகமாகப் பேசியிருப்பதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.
 

dmk



எங்கள் தலைவரை மட்டுமல்ல எங்கள் கட்சியில் உள்ள ஒரு தொண்டனைக் கூட அடையாளம் தெரியாமல் போக வைப்பதற்கு எந்தக் கொம்பனும் தமிழகத்தில் பிறக்கவில்லை என்பதை அமைச்சர் யோசித்துப் பார்க்க வேண்டும். "ஒரு எம்.எல்.ஏ கூட இல்லாத கட்சி தே.மு.தி.க." "எங்களால்தான் விஜயகாந்த் எதிர்கட்சி தலைவரானார்" "அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைக்கவில்லை என்றால் 2011-ல் விஜயகாந்த் காணாமல் போயிருப்பார்" என்றெல்லாம் விமர்சித்தவர்கள் வேறு யாருமல்ல அ.தி.மு.க. அமைச்சர்கள்தான். தே.மு.தி.க. கூட்டணியில் எனக்கு சிறிதும் விருப்பம் இல்லை. அக்கட்சியுடன் கூட்டணி சேர்ந்ததற்காக வருத்தப்படுகிறேன். வெட்கப்படுகிறேன்" என்று சட்டமன்றத்திலேயே பேசி விஜயகாந்தை கொச்சைப்படுத்தியதை அமைச்சர் சி.வி. சண்முகம் மறந்து விட்டாரா? அமைச்சர் சி.வி. சண்முகம் நாவடக்கத்துடன் பேச வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் ” என்று கூறியுள்ளார். 
 

 

சார்ந்த செய்திகள்