
அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் இன்று சென்னையை அடுத்துள்ள வானகரத்தில் அமைந்திருக்கும் தனியார் திருமண மண்டபத்தில் நடக்கிறது. இதற்காக காலை முதலே அதிமுக தொண்டர்கள் அந்த மண்டபத்தின் வெளியே குவியத்தொடங்கினர். அதன்பிறகு 10.30 மணி அளவில் ஓ.பி.எஸ்ஸும், 11.30 மணி அளவில் இ.பி.எஸ்ஸும் வருகை தந்தனர். அதனைத் தொடர்ந்து பொதுக்குழுக் கூட்டம் துவங்கியது.
இந்தக் கூட்டத்தில், அதிமுக தீர்மானத்தை வரவேற்று முன்னாள் அமைச்சர் வளர்மதி வரவேற்புரை ஆற்றினார். அப்போது அவர், “காலையிலிருந்து நீங்கள் எல்லாம் இங்கு வந்திருப்பதைப் பார்த்ததும் எம்.ஜி.ஆரின் பாடல்தான் நினைவுக்கு வருகிறது, ‘என்னதான் நடக்கும் நடக்கட்டுமே. இருட்டினில் நீதி மறையட்டுமே. தன்னாலே வெளிவரும் தயங்காதே. ஒரு தலைவன் இருக்கிறான் தயங்காதே’ அந்தத் தலைவன் இருக்கிறான்; வருவான். வெளியே வருவான், வெகு விரைவில் வருவான்” என்று பேசினார். மறைமுகமாக இ.பி.எஸின் தலைமையை முன்னாள் அமைச்சர் வளர்மதி பேசியதைத் தொடர்ந்து கூட்டத்திலிருந்த இ.பி.எஸ் தொண்டர்கள் இப்பேச்சை வரவேற்று கோஷங்களை எழுப்பினர்.