Skip to main content

சீக்ரெட் ஃபைல்: திமுகவில் 8 முக்கியப் புள்ளிகளுக்கு குறி - அசைன்மென்ட்டை முடித்த அமலாக்கத்துறை!

Published on 23/02/2023 | Edited on 23/02/2023

 

8 important figures of DMK who came into the investigation  of enforcement department

 

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்று இரண்டாவது ஆண்டை நோக்கி தமிழ்நாடு போய்க் கொண்டிருக்கிறது. பெரிய குற்றச்சாட்டுகள் எதுவும் இல்லாவிட்டாலும், அவ்வப்போது சர்ச்சைகளும் எழாமலில்லை. இருப்பினும், தக்க சமயத்தில் பாஜகவுக்கு பதிலடியும் கூட்டணிக் கட்சிகளை அரவணைத்துக் கொண்டும் ஸ்டாலின் நுட்பமாகச் செயல்படுவதாக அரசியல் விமர்சகர்கள் கூறிவருகின்றனர். தன் சொந்தக் கட்சியினரும் அமைச்சர்களும் தவறு செய்யும்பட்சத்தில் சாட்டை எடுக்கவும் ஸ்டாலின் தவறுவதில்லை என்கின்றனர்.

 

அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திமுக அரசை தினமும் விமர்சித்து வந்தாலும் மக்கள் மத்தியில் பெரிய சலசலப்பு எதுவும் எழாமல் இருப்பதை பாஜகவால் ஜீரணித்துக்கொள்ள முடியவில்லையாம். இதனால், அரசுக்கு எதிராக ஏதேனும் செய்து மக்கள் மத்தியில் திமுக அரசின் இமேஜை டேமேஜ் செய்யவேண்டும் என தமிழக பாஜக டெல்லிக்கு ரிப்போர்ட் அனுப்பியுள்ளதாம். இந்த நிலையில், திமுக அமைச்சரவையில் உள்ள முக்கிய அமைச்சர்களுக்கு டெல்லி குறிவைத்துக் காத்திருப்பதாகத் தகவல்கள் கசிந்துள்ளன.

 

அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு சில முக்கியமான அசைன்மெண்ட்டுகள் கொடுக்கப்பட்டுள்ளனவாம். அதன்படி, அமலாக்கத்துறை திமுகவின் முக்கியப் புள்ளிகள் பலரையும் கண்காணித்து வந்துள்ளது. அதிலும், முதல்வர் ஸ்டாலின் மருமகன் சபரீசன், அவரது நண்பர் அண்ணாநகர் கார்த்திக் மற்றும் தமிழக அமைச்சர்களான துரைமுருகன், எ.வ.வேலு, செந்தில் பாலாஜி உள்ளிட்ட 8 பேர் தொடர்பான சீக்ரெட் ஆவணங்களை ரகசியமாகத் திரட்டிய அமலாக்கத்துறை, அவர்கள் 8 பேர் மீதும் வழக்கைப் பதிவு செய்துவிட்டுத் தயார் நிலையில் காத்திருக்கிறதாம்.

 

டெல்லி சிக்னல் கொடுக்கும்போது அதன் அடுத்தகட்ட அதிரடி நடவடிக்கைகள் பாயும் என்று சொல்லப்படுகிறது. மத்திய உளவுத்துறை தரப்பில் இருந்தே இப்படி ஒரு தகவல் கசியவிடப்படுவதாக அரசியல் வட்டாரங்கள் கிசுகிசுக்கிறது. இது இப்படி இருக்க, இன்னொரு முக்கியத் தகவலும் கோட்டை வட்டாரத்தில் பரபரப்புடன் விவாதிக்கப்பட்டு வருகிறது. மெரினாவில் உள்ள கலைஞர் நினைவிடத்துக்கு நேரே கடலில் கலைஞருக்கு 80 கோடி ரூபாயில் பேனா சின்னம் வைக்கும் திட்டத்தை திமுக அரசு அறிவித்தது. இது தொடர்பான கருத்துக்கேட்புக் கூட்டம் நடந்தபோது, அந்த சின்னத்தை அமைத்தால் நானே உடைத்தெறிவேன் என நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் எதிர்ப்பைத் தெரிவித்ததோடு, தனது இந்தக் கருத்தை பரப்பவும் செய்தார்.

 

அதிமுகவும், பாஜகவும் கூட இதில் எதிர்ப்பு அரசியலை கையில் எடுத்தனர். இதனால், வருத்தமடைந்த முதல்வர் ஸ்டாலின், இவ்வளவு சங்கடங்களுக்கு நடுவில் அந்த பேனா சின்னத்தை அமைக்க வேண்டுமா என்று யோசிக்கிறாராம். அதனால், அந்த திட்டத்தை தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசு முடிவு செய்திருப்பதாகவும் தகவல் கூறப்படுகிறது.

 

 

 

சார்ந்த செய்திகள்