சட்டப்பேரவைத் தலைவர் தனபால் தங்களை தகுதி நீக்கம் செய்ததை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் 18 எம்எல்ஏக்கள் வழக்கு தொடர்ந்தனர். இன்று இந்த வழக்கில் தீர்ப்பளித்த 3வது நீதிபதி சத்யநாராயணன், 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது செல்லும் என உத்தரவிட்டார்.
இந்தநிலையில் நம்மிடம் பேசிய நாகை எம்எல்ஏவும், மஜக பொதுச்செயலாளருமான தமிமுன் அன்சாரி,
தமிழகம் தாண்டியும் ஆவலோடு எதிர்பார்க்கப்பட்ட தீர்ப்பு இது. இத்தீர்ப்பு இந்த கோணத்தில் தான் வர வாய்ப்புள்ளது என நான் ஓரளவு யூகித்திருந்தேன். கடந்த காலங்களில் இதுபோன்ற சட்டமன்ற சிக்கல்களில், சபாநாயகர் நடவடிக்கையை ஆதரித்தே, அதிகமான தீர்ப்புகள் வந்துள்ளன. அந்த வகையிலேயே இத்தீர்ப்பும் வந்துள்ளதாக தெரிகிறது. இதில் வெற்றி பெற்ற முதல்வர், அமைச்ச்சர்கள் மற்றும் ஆளுங்கட்சியினருக்கு எமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
இத்தீர்ப்பினால் பாதிக்கப்பட்ட 18 எம்எல்ஏக்களும் எனது நண்பர்கள். அவர்கள் மிகுந்த வருத்தத்தில் இருப்பார்கள். அரசியலில் இது போன்ற சவால்களை எல்லாம் கடக்க வேண்டும். நம்பிக்கையோடு மக்கள் பணியாற்றினால், மீண்டும் வாய்ப்புகள் கிடைக்கும் என்பதை ஆறுதலாக நட்பு முறையில், அவர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.
இத்தீர்ப்பு மூலம் ஆளுங்கட்சியினர் மீண்டும் தங்கள் ஆட்சிப் பணிகளை தொடரும் வாய்ப்பை பெற்றிருக்கிறார்கள்.
இத்தருணத்தில் மூன்று முக்கிய கோரிக்கைகளை அரசுக்கு முன் வைக்கிறேன். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அம்மா அவர்களின் கனவுகளை நினைவாக்கும் வகையில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
மாநில உரிமைகள் பறி போவதையும், விட்டுக் கொடுப்பதையும் தமிழக மக்கள் விரும்பவில்லை. இதில் தமிழக அரசு உறுதியாக இருக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, பத்து ஆண்டுகளை சிறையில் கழித்த ஆயுள் தண்டனை கைதிகளை முன் விடுதலை செய்வதில் சமூக, அரசியல் பாரபட்சம் நிலவுவதாக அதிருப்தி நிலவுகிறது. அதைப் போக்கும் வகையில் தமிழக அரசு சிறைவாசிகள் விடுதலையில் மனிதாபிமானத்தை நிலைநாட்டும் வகையில் செயல்பட வேண்டும்.
இந்த மூன்று கோரிக்கைகளையும் தமிழக அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் என இத்தருணத்தில் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு கூறினார்.