விசாரணை அமைப்புகளை ஆளும் பாஜக அரசு தவறாகப் பயன்படுத்துவதாக உச்சநீதிமன்றத்தில் 14 எதிர்க்கட்சிகளின் சார்பில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர்களை குறிவைத்து சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை ஏவப்படுவதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
டெல்லியில் புதிய மதுக்கொள்கை விவகாரம் தொடர்பாக அம்மாநிலத்தின் முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா மற்றும் வேறு பிரச்சனை ஒன்றில் முன்னாள் அமைச்சர் சத்தியேந்திர ஜெயின் ஆகியோர் சிறையில் உள்ளனர். இவ்விவகாரத்தில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கவிதாவிற்கு தொடர்பு இருப்பதாகக் கூறி அவரையும் அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. அதேபோல், கடந்த காங்கிரஸ் ஆட்சியில் ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி நிலத்தை லஞ்சமாகப் பெற்று மோசடி செய்ததாக தொடர்ச்சியாக லாலு பிரசாத் யாதவின் குடும்பத்தினர் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், 14 எதிர்க்கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் இது குறித்து முறையீடு செய்துள்ளன. அதில் ஆளும் பாஜக அரசு விசாரணை அமைப்புகளான சிபிஐ, அமலாக்கத்துறை போன்றவற்றை தவறாகப் பயன்படுத்துவதாகவும், எதிர்க்கட்சியினர் மேல் குறிவைத்து ஏவப்படுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் ராகுல்காந்திக்கு 2 வருட சிறை தண்டனை வழங்கப்பட்டது கூட பழிவாங்கும் நடவடிக்கை என எதிர்கட்சித் தலைவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.