ஆன்லைன் உணவு விநியோகத்தில் முன்னணியில் உள்ள சொமேட்டோ நிறுவனத்தின் பொதுப் பங்குகள், இந்திய பங்குச் சந்தைகளில் வெள்ளிக்கிழமை (ஜூலை 23) பட்டியலிடப்படுகின்றன.
சொமேட்டோ நிறுவனம், வணிக அபிவிருத்திக்காக பொதுப் பங்குகள் வெளியீடு மூலம் 9,375 கோடி ரூபாய் திரட்ட முடிவு செய்திருந்தது. இதையடுத்து, இந்திய பங்குச் சந்தைகளில் ஜூலை 14ஆம் தேதி ஐ.பி.ஓ. எனப்படும் பொதுப்பங்கு வெளியீட்டில் முதன்முதலில் களமிறங்கியது.
ஒரு பங்கின் விலை 74 - 76 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டு, அதிகபட்ச விலையின் அடிப்படையில் பங்குகள் விற்பனை செய்யப்பட்டன. கரோனா ஊரடங்கு காலத்திலும் கடந்த ஆண்டு கணிசமாக லாபம் ஈட்டியிருந்தது சொமேட்டோ. எனினும், அந்நிறுவனத்துக்கு கடன் சுமையும் இருந்துவருகிறது. இதனால் பொதுப்பங்கு எந்தளவுக்கு வெற்றிபெறும் என்ற தடுமாற்றமான நிலையும் ஆரம்பத்தில் இருந்தது.
ஆனால், எதிர்பாராத வகையில் சொமேட்டோ பொதுப் பங்குகள், வெளியீட்டைவிட 38.25 மடங்குகள்வரை ஒதுக்கீடு கேட்டு விண்ணப்பங்கள் குவிந்தன. ஜூலை 16ஆம் தேதியுடன் இதன் பங்கு விற்பனை முடிவடைந்தன. கடந்த 13 ஆண்டுகளில், பொதுப்பங்கு வெளியீட்டின் மூலம் 5,000 கோடி ரூபாய்க்கு மேல் திரட்டிய நிறுவனங்களில் மிக அதிக அளவு பங்குகள் கோரி விண்ணப்பங்கள் குவிந்தது சொமேட்டோ நிறுவனத்திற்கு மட்டுமே என வியப்புடன் கூறுகின்றன பங்குத்தரகு நிறுவனங்கள்.
அங்கீகரிக்கப்பட்ட பங்குத்தரகு நிறுவனங்கள் பெரிய அளவில் இந்நிறுவனத்தை சப்போர்ட் செய்திருந்தன. அவற்றிடமிருந்து மட்டும் 51.79 மடங்கு விண்ணப்பங்களும், அமைப்பு ரீதியற்ற முதலீட்டாளர்களிடம் இருந்து 32.96 மடங்கு விண்ணப்பங்களும், சில்லரை முதலீட்டாளர்களிடம் இருந்து 7.45 மடங்கு விண்ணப்பங்களும் குவிந்தன. இதனால் பட்டியலிடப்படுவதற்கு முன்பே கிரே மார்க்கெட்டிலும் இப்பங்குகளுக்கு ஓரளவு எதிர்பார்ப்பு நிலவியது.
இந்நிலையில்தான், பெரும் எதிர்பார்ப்புடன் இந்தியப் பங்குச்சந்தைகளில் சொமேட்டோ பங்குகள் இன்று (23.07.2021) பட்டியலிடப்படுகின்றன. தொடக்கத்திலேயே இப்பங்குகள் குறைந்தபட்சம் 96 முதல் 100 ரூபாய் என்ற அளவில் விற்பனையைத் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது, முதலீட்டாளர்களுக்கு குறைந்தபட்சம் 25 முதல் 30 சதவீதம் வரை லாபம் கிடைக்கும் எனத் தெரிகிறது.
சில நாட்களுக்கு முன்பு, மற்றொரு முன்னணி உணவு வர்த்தக நிறுவனமான ஜூபிலண்ட் ஃபுட் ஒர்க்ஸ், நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் கணிசமான லாபம் ஈட்டியிருந்தது. அதன் நேர்மறையான சமிக்ஞைகளும் கூட சொமேட்டோ பங்குகள் மீதான பலத்த எதிர்பார்ப்புக்கு காரணமாகச் சொல்லப்படுகிறது.
இதன் காரணமாகவே சொமேட்டோ நிறுவனம், ஜூலை 27ஆம் தேதி வெளியிடத் திட்டமிட்டிருந்த பங்குகளை இன்றே பட்டியலிடுவதாகவும் பங்குத்தரகு நிறுவனங்கள் தரப்பில் கூறப்படுகின்றன.
சொமேட்டோ நிறுவனம் முதலீட்டாளர்களுக்கு லாபம் கொடுக்குமா? இல்லையா? என்பது இன்று தெரியும்.