புதுச்சேரி அரியாங்குப்பம் மணவெளி பெரியார் நகர், முதல் தெருவை சேர்ந்தவர் ரவிகாந்த் ஜான்மெரி என்கிற பாரத்(19). கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வாணரபேட்டையில் வசித்து வந்த பாரத்துக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ஒரு கும்பலுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் பாரத் வாணரப்பேட்டையில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
இந்த நிலையில் கடந்த வாரம் வாணரப்பேட்டையில் நடந்த நண்பரின் துக்க நிகழ்ச்சியில் பாரத் கலந்து கொண்டார். அந்த சவ ஊர்வலத்தில் பாரத் ஆடிக் கொண்டிருந்த போது அதே பகுதியை சேர்ந்த தனுஷ் என்பவர் தலைமையிலான கும்பல் பாரத்தை தாக்கி அங்கிருந்து துரத்தி விட்டனர். இதனால் ஆத்திரமடைந்த பாரத், தனுஷை கொலை செய்ய தான் வைத்திருந்த பட்டாசுகளைக் கொண்டு நாட்டு வெடி குண்டு தயாரித்தார்.
நேற்று முன்தினம் அதிகாலை தான் தயாரித்த நாட்டு வெடிகுண்டை ரயில் நிலையத்தின் நான்காவது நடை மேடை அருகே வெடிக்க வைத்து சோதனை செய்தார். வெடிகுண்டு சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தனர். அதற்குள் பாரத் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். அதையடுத்து ஒதியன்சாலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை செய்தனர். விசாரணையில் வாணரப்பேட்டைக்கு வரக்கூடாது என்று துரத்திய தனுஷ் கும்பலை மிரட்டுவதற்காக நாட்டு வெடிகுண்டு தயாரித்து ரயில் நிலைய பிளாட்பாரம் பகுதியில் வெடிக்க செய்தது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து பாரத் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.