தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் நீட் தேர்வு நடைபெறும் போதும், நீட் தேர்வு முடிவுகள் வெளியாகும் போதும் தோல்வி பயம் மற்றும் குறைந்த மதிப்பெண்கள் காரணமாக மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் தொடர்கதையாக நடைபெற்று வருகிறது. இதனால் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் திமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
புதுச்சேரியில் ரியல் எஸ்டேட் செய்து வரும் அண்ணாநகரை சேர்ந்த துரைராஜ் திண்டிவனம் அரசு பொது மருத்துவமனையில் பிசியோதெரபிஸ்டாக பணியாற்றி வருபவர். துரைராஜ் மனைவி பரிமளம். இவர்களுக்கு திருமணமாகி 23 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு பிரியதர்ஷினி(23) என்ற மகளும், ஹேமச்சந்திரன்(20) என்ற மகனும் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக கணவன், மனைவி இருவரும் கடந்த எட்டு ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். பிள்ளைகள் இருவரும் தாயுடன் வசித்து வந்தனர். மகள் பிரியதர்ஷினி தனியார் மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இதேபோல் மகன் ஹேமச்சந்திரனையும் மருத்துவம் படிக்க வைக்க வேண்டும் என்ற கனவுடன் பரிமளம் இருந்து வந்துள்ளார். இதனால் மகனை அடிக்கடி நீட் தேர்வுக்கு படிக்குமாறு வற்புறுத்தி வந்துள்ளார்.
ஹேமச்சந்திரன் பிளஸ் டூ முடித்துவிட்டு கடந்த 2 ஆண்டுகளாக நீட் தேர்வு எழுதியுள்ளார். அதில் குறைந்த மதிப்பெண் எடுத்ததால் எம்.பி.பி.எஸ் சீட் கிடைக்கவில்லை. இதனால் மீண்டும் நீட் தேர்வு எழுதி அதிக மதிப்பெண் எடுக்குமாறு மகனிடம் கூறியுள்ளார். இதையடுத்து ஹேமச்சந்திரன் நீட் தேர்வுக்கு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு ஹேமச்சந்திரன் மிகுந்த மன அழுத்தத்துடன் இருந்தார். எனவே பரிமளமும் அவரது மகள் பிரியதர்ஷனியும் அவருக்கு நீட் தேர்வு எழுதுவது குறித்து ஆலோசனைகள் கூறி வந்தனர்.
அவர் மூன்றாவது முறையாக நீட் தேர்வு எழுதத் தயாராக இருந்த நிலையில், நேற்று அதிகாலை 1 மணி வரை தேர்வுக்காக படித்துள்ளார். அவரை பார்த்துவிட்டு பரிமளம் தூங்கச் சென்றுள்ளார். பின்னர் காலை 6 மணிக்கு எழுந்த பரிமளம் மகன் இருந்த அறைக்கு சென்றார். அங்கு ஹேமச்சந்திரன் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். அதனைத் தொடர்ந்து இதுகுறித்து பரிமளம் உருளையன்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ராமச்சந்திரன் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தியதில் ஹேமச்சந்திரன் எழுதிய உருக்கமான கடிதம் ஒன்று கிடைத்தது. அதில், “நாம் அனைவரும் ஒரே இடத்தில் வசித்தாலும் நான் மட்டும் தனியாக இருக்கிறேன். நான் இதுவரை வாழவே இல்லை, அதனால் வெளியேறி விடுகிறேன். எனது அம்மாவை யாரும் குறை கூற வேண்டாம். இது என்னுடைய முடிவு” என்று எழுதப்பட்டிருந்தது.
நாடு முழுவதும் நேற்று நீட் தேர்வு நடைபெற்று முடிந்த நிலையில் மூன்றாவது முறையாக நீட் தேர்வு எழுதுவதற்கு பயந்து புதுச்சேரியில் மாணவன் ஒருவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.