வெறும் குச்சியோடு சென்று புலியுடன் சண்டையிட்ட இளம்பெண் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பியுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள மலைக்கிராமத்தில் வசிப்பவர் ரூபாலி மேஷ்ராம். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தனது வீட்டில் இருந்தபோது, ஆட்டுக் கொட்டகையில் ஆடுகள் அலறும் சப்தம் கேட்டு வெளியே வந்து பார்த்துள்ளார். அப்போது, வனத்திலிருந்து வந்திருந்த புலி ஒன்று ஆடுகளை தாக்கிக் கொண்டிருப்பதைக் கண்டதும், கையில் ஒரு குச்சியோடு சென்று புலியுடன் சண்டைபோட்டுள்ளார். இதில், ரூபாலியின் முகம், தலை மற்றும் உடலின் சில பாகங்களில் காயமேற்பட்டது. இந்த சப்தம் கேட்டு வந்த ரூபாலியின் தாயார், தக்க சமயத்தில் ரூபாலியை வீட்டினுள் இழுத்து காப்பாற்றியுள்ளார். ஆனால், புலி ஆடு ஒன்றை தன்னோடு தூக்கிச் சென்றுவிட்டது. இதுகுறித்து வனத்துறையிடம் ரூபாலியின் குடும்பத்தினர் புகாரளித்துள்ளனர்.
இந்த சம்பவத்தால் ஏற்பட்ட காயங்களுடன் இருக்கும் ரூபாலி, செல்பி ஒன்றை எடுத்துள்ளார். இது நடந்து ஒருவாரம் ஆனாலும், இப்போதுதான் செய்தியாக வெளிவந்திருக்கிறது. அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர், புலியுடன் மோதுவதற்கு அதீத மன தைரியம் வேண்டும். அப்படியொன்று நடந்தும் ரூபாலி உயிருடன் இருப்பது மிகப்பெரிய விஷயம் என தெரிவித்துள்ளார். ரூபாலியின் தலையில் அடிபட்டிருப்பதால் அவர் நலமுடன் இருந்தாலும், கூடுதல் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.