மருத்துவமனையில் செவிலியர்களை வீடியோ எடுத்ததாகக் கூறி, இளைஞர்களை தடிமனான கம்பினால் செவிலியர்கள் தாக்கும் வீடியோ காட்சி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
பீகார் மாநிலம், சாரான் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைக்கு, மருத்துவச் சான்றிதழ் வாங்குவதற்காக இரண்டு இளைஞர்கள் வந்துள்ளனர். வந்த நபர்கள் மருத்துவமனையை தங்களது செல்போனில் வீடியோ பதிவாக எடுத்துள்ளனர். இதனைக் கண்ட செவிலியர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் அவர்களைப் பிடித்து தனியறையில் அடைத்து வைத்து விசாரித்துள்ளனர்.
செவிலியர் ஒருவர் கையில் மூங்கில் போன்ற தடிமனான கம்பினை எடுத்துக்கொண்டு இருவரையும் மாறி மாறி கண்மூடித்தனமாக தாக்கியுள்ளார். இதனை அங்கிருந்தவர்கள் வீடியோ காட்சிகளாக எடுத்துள்ளனர். மேலும், இளைஞர்களைத் தாக்கும் பெண் உன் வீட்டுப் பெண்களை இப்படி வீடியோவாக எடுப்பியா எனக் கூறிக்கொண்டே தாக்குகிறார்.
அந்த வீடியோ காட்சியில், மருத்துவமனையில் இருக்கும் குறைகளைத்தான் வீடியோவாக எடுத்தோம் என ஒரு இளைஞர் கூறுகிறார். இருந்தும், அவர் கூறுவதைக் கேட்காத செவிலியர்கள் ஒருவர் மாற்றி ஒருவராக தாக்கும் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
இவ்விவகாரம் இருவேறு விதமான விவாதத்தை எழுப்பியுள்ளது. இணையத்தில் பீகாரின் மருத்துவத்துறையைக் குறிப்பிட்டு, இளைஞர்களைத் தாக்கிய மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் செவிலியர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி வருகின்றனர். அதே சமயம், மற்றொரு தரப்பினர் வீடியோ எடுத்த இளைஞர்கள் மீது குற்றஞ்சாட்டி, செவிலியர்கள் செய்தது சரிதான் எனக் கூறி வருகின்றனர்.
இச்சம்பவம் பீஹாரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.