வாட்ஸ்அப் நிறுவனம் இந்த வருட தொடக்கத்தில், தனது சேவை மற்றும் தனியுரிமை கொள்கைகளில் மாற்றத்தைக் கொண்டுவந்தது. பல்வேறு எதிர்ப்புகளுக்குப் பிறகு இந்த மாற்றங்கள் கடந்த மே 15ஆம் தேதி அமலுக்கு வந்தது. இதனையடுத்து வாட்ஸ்அப், அதன் தனியுரிமை கொள்கைகளில் கொண்டுவந்துள்ள மாற்றத்தைத் திரும்பப் பெறவோ அல்லது அந்த மாற்றங்களைப் பயனர்கள் ஏற்காமல் இருப்பதற்கு வாய்ப்பளிக்கவோ அந்த நிறுவனத்துக்கு உத்தரவிட மத்திய அரசை அறிவுறுத்தும்படி டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் இன்று (03.06.2021) மத்திய அரசு பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்தது. அதில், "புதுப்பிக்கப்பட்ட தனியுரிமை கொள்கைகளுக்குப் பயனர்களிடமிருந்து தந்திரமாக ஒப்புதல் பெறுவதன் மூலம் வாட்ஸ்அப், பயனர்களுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது" என மத்திய அரசு குற்றஞ்சாட்டியதோடு, "வாட்ஸ்அப், அதன் டிஜிட்டல் வலிமையை தற்போதுள்ள பயனர்கள் மீது கட்டவிழ்த்துவிட்டுள்ளது. தனிப்பட்ட தரவு பாதுகாப்பு (பி.டி.பி) மசோதா சட்டமாக மாறுவதற்கு முன்பு, வாட்ஸ்அப் தற்போதுள்ள பயனர்களைப் புதுப்பிக்கப்பட்ட தனியுரிமை கொள்கையை ஏற்றுக்கொள்ள கட்டாயப்படுத்தும்" எனவும் தெரிவித்தது.
இந்தநிலையில், மத்திய அரசின் இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக வாட்ஸ்அப் நிறுவனம் பதிலளித்துள்ளது. இதுகுறித்து வாட்ஸ்அப் நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர், "நாங்கள் மத்திய அரசுக்கு ஏற்கனவே தனியுரிமை கொள்கை குறித்து பதிலளித்துள்ளோம். பயனர்களின் தனியுரிமையே எங்கள் முன்னுரிமையாக இருக்கும் என்று அவர்களுக்கு உறுதியளித்துள்ளோம். சமீபத்தில் புதுப்பிக்கப்பட்ட தனியுரிமை கொள்கைகள், மக்களின் தனிப்பட்ட செய்திகள் தொடர்பாக தனியுரிமையை மாற்றாது. மாறாக வணிக அமைப்புகளுடன் எவ்வாறு தொடர்புகொள்ளலாம் என்பது குறித்து மக்களுக்கு கூடுதல் தகவல்களை வழங்கும்" என தெரிவித்துள்ளார்.
மாற்றப்பட்ட தனியுரிமை கொள்கையை ஏற்காவிட்டால், படிப்படியாக வாட்ஸ்அப் செயல்பாடுகள் குறைக்கப்படும் என அந்த நிறுவனம் தெரிவித்திருந்த நிலையில், தனியுரிமை கொள்கையை ஏற்காவிட்டாலும் வரும் வாரங்களில் வாட்ஸ்அப் செயலியின் செயல்பாட்டைக் கட்டுப்படுத்தமாட்டோம் எனவும் வாட்ஸ்அப் நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் கூறியுள்ளார்.