இந்தியா முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அப்பணிகளை வேகப்படுத்த மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். இந்தநிலையில் மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், இம்மாத இறுதிக்குள் தகுதியுள்ள அனைவருக்கும் இரண்டாவது டோஸ் தடுப்பூசியை செலுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
இதனால் மத்திய பிரதேசத்தின் மாவட்ட ஆட்சியர்கள் அழுத்தத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்தநிலையில், மாவட்ட ஆட்சியர் ஒருவர், தடுப்பூசி இலக்கை எட்டவில்லையென்றால், உங்களை தூக்கிலிடுவேன் என என சுகாதார பணியாளர்களை எச்சரிக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
குவாலியர் மாவட்ட ஆட்சியர் கௌஷ்லேந்திர விக்ரம் சிங் தற்போது வைரலாகி வரும் அந்த வீடியோவில், “வயல்களுக்கும், வீடுகளுக்கும் சென்று அவர்களுக்கு (மக்களுக்கு) தடுப்பூசி போடுங்கள். வற்புறுத்தி தடுப்பூசிகளை போடுங்கள். தேவைப்பட்டால் அவர்களின் வீட்டிற்கு வெளியேயே நாள் முழுவதும் காத்திருங்கள், ஆனால் அவர்களுக்கு தடுப்பூசி போடுங்கள். தடுப்பூசி போடுவதில் ஒருநாள் தாமதமானாலும் நான் உங்களை தூக்கிலிடுவேன்" என கூறுகிறார்.
மாவட்ட ஆட்சியர் கௌஷ்லேந்திர விக்ரம் சிங், பித்வார் பகுதியில் ஆய்வு செய்தபோது உள்ளூர் மக்களிடம் பேசியதாகவும், அப்போது அந்த பகுதியில் குறைந்தளவே தடுப்பூசி செலுத்தப்பட்டதை கண்டறிந்ததாகவும் கூறியுள்ள அதிகாரிகள், இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்துவது குறித்து கிராம மக்களுக்கு தெரிவிக்கப்படவில்லை என அறிந்து ஆத்திரமடைந்துவிட்டதாகவும் கூறியுள்ளனர்.