ஆஸ்கருக்கு தேர்வாகியிருக்கும் ‘நியூட்டன்’ திரைப்படம்!
நேற்று இந்தியா முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி அனைத்து தரப்பினரிடமும் வரவேற்பைப் பெற்றிருக்கும் திரைப்படம் நியூட்டன். இந்தத் திரைப்படம் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் அதிகமுள்ள மக்கள் வாழும் பகுதிகளில், தேர்தல் அதிகாரி நியூட்டன் குமார் என்பவரால் தேர்தல் எப்படி நடத்தப்படுகிறது என்பதைப் பேசும் படமாக அமைந்திருக்கிறது.
இந்தத் திரைப்படம் 2018ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் சர்வதேச அளவில் சிறந்த திரைப்படத்திற்கான விருதுக்காக போட்டியிடும் படங்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இந்தத் தகவலை இந்திய திரைப்பட சங்கம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து படத்தின் நாயகன் ராஜ்குமார் ராவ் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘நியூட்டன் திரைப்படம் இந்தியா தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வமாக தேர்வாகியுள்ளது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன். படக்குழுவினருக்கு வாழ்த்துகள்’ என தெரிவித்துள்ளார்.