மத்திய அரசுக்குக் கிடைத்த 25 லட்சம் கோடி எங்கே எனக் காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த ஓராண்டாகவே கேஸ் சிலிண்டர் விலை அதிகரித்து வரும் நிலையில் தற்பொழுது வீட்டு உபயோகத்திற்குப் பயன்படும் சமையல் சிலிண்டரின் விலை 25 ரூபாய் அதிகரித்து 900 ரூபாயைக் கடந்துள்ளது. கடந்த ஓராண்டில் மட்டும் சமையல் சிலிண்டரின் விலை 285 ரூபாய் அதிகரித்துள்ளது. இந்த விலையேற்றம் குறித்து காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி தெரிவித்துள்ளதாவது, ''கடந்த 7 ஆண்டில் பெட்ரோல், டீசல், கேஸ் மூலம் மத்திய அரசுக்கு கிடைத்த 25 லட்சம் கோடி எங்கே சென்றது. பாஜக ஆட்சிப்பொறுப்பேற்ற 2014 ஆம் ஆண்டு முதல் பெட்ரோல் விலை 42 சதவிகிதமும், டீசல் விலை 55 சதவிகிதமும் உயர்ந்துள்ளது.
ஒரு பக்கம் பணமதிப்பிழப்பையும், மறுபுறம் பணமாக்கும் திட்டத்தையும் அறிவிக்கிறார்கள். பிரதமரின் பொருளாதார நடவடிக்கைகளால் பிரதமர் மோடியின் நான்கைந்து நண்பர்கள் மட்டுமே பலன் அனுபவிக்கின்றனர். மாத ஊதியக்காரர்கள், விவசாயிகள், கூலித்தொழிலாளர்கள் உள்ளிட்டோர் வருவாய் இழப்புக்கு ஆளாகியுள்ளனர். 'மேக் இன் இந்தியா' திட்டத்தின் மூலம் மத்திய பாஜக அரசு என்ன முன்னேற்றத்தைக் கண்டுள்ளது. எரிபொருள் விலை உயர்வுக்கு தற்போதைய அரசின் தவறான பொருளாதார கொள்கையே காரணம். 1991 போல் 2021 ல் கடும் பொருளாதார வீழ்ச்சி கண்டுள்ளது. புதிய திட்டங்களைப் பற்றிப் பேசிக்கொண்டே இருந்தால் போதாது. அதைச் செயல்படுத்த வேண்டும். பாஜக ஆட்சியில் ஜிடிபி அதிகரித்து வருவதாக பிரதமரும், நிதியமைச்சரும் கூறிவருகின்றனர். ஆனால் பிரதமரும், நிதியமைச்சரும் கூறும் ஜிடிபி உயர்வு என்பது பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வுதான் என்பது பின்னர்தான் புரிந்தது '' எனக்கூறியுள்ளார்.