மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங் மாவட்டத்தில் உள்ள பனிஷ்தேவா பகுதியில் இன்று (17.06.2024) காலை 9 மணியளவில் சீல்டா - கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் நின்று கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக வந்த சரக்கு ரயில் சீல்டா - கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் மீது மோதியதாகக் கூறப்படுகிறது. இந்த ரயில் விபத்தில் பலர் காயமடைந்துள்ளதாகவும், 4 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி இருந்தது. சரக்கு ரயில் மோதியதில் பயணிகள் ரயிலின் கடைசி மூன்று பெட்டிகள் முழுவதுமாக சீர்குலைந்துள்ளன. அதிலும் குறிப்பாக எக்ஸ்பிரஸ் ரயிலின் கடைசிப் பெட்டி தூக்கி வீசப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
விரைவு ரயில் மீது சரக்கு ரயில் மோதி விபத்து ஏற்பட்டுள்ள சம்பவம் ரயில் பயணிகள் மற்றும் பொது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இத்தகைய சூழலில் இந்த விபத்தில் பலி எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் எனக் கூறப்படுகிறது. ரயில் விபத்து நடந்த இடத்தை பார்வையிட மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் டார்ஜிலிங் செல்கிறார். விபத்து நடந்த இடத்தில், டார்ஜிலிங் எம்.பி., ராஜு பிஸ்டா நேரில் பார்வையிட்டார்.
இந்த விபத்து குறித்து ரயில்வே வாரியத்தின் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஜெய வர்ம சின்ஹா கூறுகையில், “காஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து தொடர்பான மீட்புப் பணிகள் நிறைவடைந்தன. இந்த சம்பவத்தில் சரக்கு ரயிலின் ஓட்டுநர், உதவி ஓட்டுநர் மற்றும் காஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயிலின் காவலாளி (guard) ஆகியோர் உயிரிழந்துள்ளனர். சரக்கு ரயில் ஓட்டுநர் சிக்னலை மீறியதாக தெரியவருகிறது. அகர்தலா - சீல்டா வழித்தடத்தில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன” எனத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தனது எக்ஸ் வலைத்தளப் பதிவில், “மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங் ரயில் விபத்தில் பயணிகள் உயிரிழந்த செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது. எனது எண்ணங்களும் பிரார்த்தனைகளும் துயரமடைந்த குடும்பத்தினருடன் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும், நிவாரணம் கிடைக்கவும் பிரார்த்திக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
அதே சமயம் ரயில் விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் நிவாரணமாக வழங்கப்படும் எனப் பிரதமர் மோடி அறிவித்துள்ளார். அதோடு ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் கூறுகையில், “ரயில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும். இந்த விபத்தில் மரணமடைந்தவர்களுக்கு ரூ.10 லட்சம், கடுமையான படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ.2.5 லட்சம் மற்றும் சிறிய காயங்களுக்கு ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.