மேற்கு வங்க முதல்வர் மம்தாவுக்கும், அம்மாநில ஆளுநர் ஜகதீப் தங்கருக்கும் தொடர்ந்து பல்வேறு விவகாரங்களில் மோதல் ஏற்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக திரிணாமூல் காங்கிரஸ் கட்சி, ஜகதீப் தங்கர் மீது நாடளுமன்றத்தில் உரிமை மீறல் தீர்மானத்தை கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது.
இந்தநிலையில் ஆளுநர் ஜகதீப் தங்கர், மேற்கு வங்க சட்டமன்றம் கூடுவதை நிறுத்திவைத்து உத்தரவு பிறப்பித்துள்ளார். இதன்காரணமாக ஆளுநரின் அனுமதியின்றி மேற்கு வங்க சட்டப்பேரவையை கூட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சட்டமன்றம் கூட வேண்டுமானால் ஆளுநரின் அனுமதியோடு, அவரது உரையோடு மட்டுமே கூட வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
மேற்கு வங்கத்தில் விரைவில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற இருக்கிறது. ஒருவேளை ஆளுநர் சட்டமன்றத்தை கூட்ட அனுமதி மறுத்தால் பட்ஜெட் தாக்கல் செய்ய முடியாத நிலை ஏற்படும். இது அரசின் செயல்பாடுகளை பாதிக்கும். மேலும் ஆளுநரின் இந்த உத்தரவு, அரசியலமைப்பு ரீதியிலான நெருக்கடிக்கும் வழி வகுக்கும் என கருத்தப்படுகிறது.
இதற்கிடையே திரிணாமூல் காங்கிரஸ், ஆளுநரின் உத்தரவை, இதற்கு முன் இல்லாதது என்றும், அரசியல் உள்நோக்கம் கொண்டது என்றும் விமர்சித்துள்ளது.