ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்த நிலையில், மேற்குவங்கத்தில் மீண்டும் திரிணாமூல் காங்கிரஸ் அறுதி பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்தது. இதனையடுத்து பாஜக கட்சியிலிருந்து பலர், திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்குத் தாவப் போவதாகவும் தகவல்கள் வெளியாகின.
இதற்கிடையே மேற்குவங்க பாஜகவின் ஒழுங்கு நடவடிக்கை குழு, பாஜகவிற்கு எதிரானவர்களை ஃபேஸ்புக்கில் நண்பர்களாக வைத்துக்கொள்ளவும், பாஜகவிற்கு எதிரான பக்கங்களை லைக் செய்யவும் அக்கட்சியினருக்குத் தடை விதித்துள்ளதாகவும், மீறுபவர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும் என்பதோடு, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேற்குவங்க பாஜக தலைவர்கள் சிலரே அம்மாநில சட்டப்பேரவை தேர்தல் தோல்விக்கு பாஜக தேசிய தலைமைதான் காரணம் என சமுகவலைதளங்களில், குறிப்பாக ஃபேஸ்புக்கில் விமர்சிப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த வினோத உத்தரவு மேற்குவங்க பாஜகவினரை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.