குடியுரிமை சட்ட திருத்த மசோதா இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறப்பட்டு ஜனவரி 10 முதல் இந்த சட்டம் அமலுக்கு வந்தது.
இந்நிலையில், இந்த சட்டம் குறித்து மக்கள் பயப்பட தேவையில்லை எனவும், இது யாருடைய குடியுரிமையையும் பறிக்காது எனவும் மத்திய அரசு தொடர்ந்து கூறி வருகிறது. ஆனாலும், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், இந்த சட்டத்தை தங்கள் மாநிலத்தில் அமல்படுத்தமாட்டோம் என கேரளா, மேற்கு வங்கம், பஞ்சாப் உள்ளிட்ட பல மாநில அரசுகள் போர்க்கொடி தூக்கியுள்ளன. பல மாநிலங்களில் மக்கள் போராட்டங்களின் போது வன்முறை ஏற்பட்டு துப்பாக்கி சூடும் நடைபெற்றது. இதுகுறித்து மேற்குவங்க பாஜக தலைவர் திலீப் கோஷ் பேசியது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசிய மேற்குவங்க பாஜக தலைவர் திலீப் கோஷ், "பொது சொத்துக்களை அழித்த மக்கள் தனது கட்சிக்கான வாக்காளர்கள் என்பதால் மம்தா பானர்ஜியின் காவல்துறை அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதே நாங்கள் ஆட்சி செய்யும் உ.பி., அசாம் மற்றும் கர்நாடகாவில் உள்ள எங்கள் அரசு அவர்களை நாய்களைப் போல சுட்டுக் கொன்றது" என தெரிவித்தார். போராடிய மக்களை நாய்கள் என்று கூறிய திலீப் கோஷின் பேச்சு பல்வேறு தரப்பிலும் எதிர்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.