Skip to main content

"ஏழைகள் இருக்கிறார்கள் என்பதை நினைவுகூர்ந்ததற்காக நிதியமைச்சருக்கு நன்றி" -ப.சிதம்பரம்!

Published on 01/02/2022 | Edited on 01/02/2022

 

p chidambaram

 

2022-23ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டை பிரதமர் மோடி உட்பட பாஜகவும் அதன் கூட்டணி கட்சிகளும் வரவேற்றுள்ளன. அதேநேரத்தில் எதிர்க்கட்சிகள், பூஜ்ஜிய பட்ஜெட் என இந்த பட்ஜெட்டை விமர்சித்து வருகின்றனர்.

 

இந்தநிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டை கடுமையாக தாக்கியுள்ளார். அவர் கூறியுள்ளதாவது...

 

இன்றைய பட்ஜெட் உரை, இதுவரை ஒரு நிதியமைச்சரால் வாசிக்கப்பட்டதிலேயே மிகவும் முதலாளித்துவமான உரையாகும். பாரா 6 இல் மட்டும் 'ஏழை' என்ற வார்த்தை இரண்டு முறை வருகிறது. இந்த நாட்டில் ஏழைகள் இருக்கிறார்கள் என்பதை நினைவுகூர்ந்ததற்காக நிதியமைச்சருக்கு நன்றி தெரிவிக்கிறோம். இந்த முதலாளித்துவ பட்ஜெட்டை மக்கள் நிராகரிப்பார்கள்.

 

அடுத்த 25 ஆண்டுகளுக்கான திட்டத்தை நிதியமைச்சர் கோடிட்டுக் காட்டுவது எனக்கு ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது. நிகழ்காலம் குறித்து கவனம் செலுத்த தேவையில்லை என நம்புவது போலவும், பொறுமையாக காத்திருக்குமாறு பொதுமக்களை கேட்டுக் கொள்ளலாம் எனவும் அரசாங்கம் நம்புவதுபோல இருக்கிறது. இது இந்திய மக்களை கேலி செய்யும் செயல்.

 

ரிசர்வ் வங்கிக்கு பதிலாக, இன்று முதல் கிரிப்டோகரன்சி சட்டப்பூர்வமானது என நிதியமைச்சர் கிட்டத்தட்ட அறிவித்து விட்டார். இப்போது இவை எதுவுமே 99.99% இந்திய மக்களுக்கு பயனளிக்கவில்லை. இவ்வாறு ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்