இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, தனது சுதந்திர தின உரையில் கூறிய கதி சக்தி திட்டத்தை இன்று தொடங்கி வைத்தார். பி.எம்.கதிசக்தி - நேஷ்னல் மாஸ்டர் பிளான் என அழைக்கப்படும் இந்த திட்டம் 100 லட்சம் கோடியில் செயல்படுத்தப்படவுள்ளது. பல்முனை இணைப்பை ஏற்படுத்துவதன் மூலம் உள்கட்டமைப்பு திட்டங்களின் செலவைக் குறைத்து, பொருளாதாரத்தை மேம்படுத்துவது இந்த திட்டத்தின் நோக்கமாகும்.
மேலும் பி.எம்.கதிசக்தியில் திட்டத்தில், பல்வேறு துறைகளை ஒன்றிணைத்து வளர்ச்சி திட்டங்களை வேகப்படுத்தும் அம்சமும் இடம்பெற்றுள்ளது. இந்த திட்டத்தைத் தொடங்கிவைத்த பிரதமர் மோடி பேசியதாவது;
அடுத்த 25 ஆண்டுகளுக்கான அடித்தளத்தை நாம் அமைக்கிறோம். இந்த தேசிய மாஸ்டர் பிளான் 21 ஆம் நூற்றாண்டின் வளர்ச்சித் திட்டங்களுக்கு 'கதிசக்தி'யை (கதி- வேகம்) வழங்கும். அந்த திட்டங்களைச் சரியான நேரத்தில் முடிக்க உதவும்.
முன்னதாக, எல்லா இடங்களிலும் 'வேலை நடந்து கொண்டிருக்கிறது' என்ற போர்டுகளை நாம் அனைத்து இடங்களிலும் பார்த்து வந்தோம். அதனைப் பார்த்துப் பார்த்து இந்த பணிகள் ஒருபோதும் நிறைவடையாது என மக்கள் நம்பத் தொடங்கிவிட்டனர். இது மக்களின் அவநம்பிக்கையைக் காட்டியது. ஆனால் நாங்கள் அதை மாற்றினோம். நாங்கள் நன்கு திட்டமிட்டு வளர்ச்சி திட்டங்களில் 'கதி'யை (வேகத்தை) அறிமுகப்படுத்தினோம்.
உள்கட்டமைப்பு மேம்பாடு என்பது பெரும்பாலான அரசியல் கட்சிகளின் முன்னுரிமையிலிருந்து வெகு தொலைவில் உள்ளது. அது அவர்களின் தேர்தல் அறிக்கையின் ஒரு பகுதியாக இருந்ததில்லை. ஆனால் தரமான உள்கட்டமைப்பு என்பது நிலையான வளர்ச்சிக்கான ஒரு வழி. அது பொருளாதாரத்தை வளர்கிறது மற்றும் வேலைவாய்ப்பை உருவாக்குகிறது.
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.