
இந்தியா சார்பில் நிலவை ஆராய சந்திரயான் - 3 விண்கலம் கடந்த ஜூலை 14 ஆம் தேதி ஸ்ரீ ஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்திலிருந்து எல்.வி.எம் - 3 ராக்கெட் மூலம் விண்ணில் பாய்ந்தது. அதனைத் தொடர்ந்து பூமியின் நீள்வட்டப் பாதையைச் சுற்றி வந்த சந்திரயான் - 3 பல்வேறு கட்ட நடவடிக்கைகளுக்கு பிறகு நிலவின் ஈர்ப்பு விசைக்குள் செலுத்தப்பட்டு தற்பொழுது நிலவுக்கு மிக அருகில் சென்றுள்ளது.
இஸ்ரோவின் தற்போதைய திட்டப்படி ஆகஸ்ட் 23 ஆம் தேதி மாலை 6.04 மணிக்கு விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கும் என இஸ்ரோ அறிவித்திருக்கிறது. சந்திரயான் - 3 தரையிறங்கும் காட்சிகளை நேரடியாக நேரலையில் பார்ப்பதற்காக 23 ஆம் தேதி மாலை 5 மணியிலிருந்து தேசிய தொலைக்காட்சியான டிடி நேஷனல் தொலைக்காட்சி நேரலை செய்யப்படுகிறது. இஸ்ரோவின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திலும் சந்திரயான் - 3 விண்கலம் தரையிறங்கும் காட்சிகள் ஒளிபரப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
2019 ஆம் ஆண்டு சந்திராயன்-2ல் விக்ரம் லேண்டரை தரை இறக்கும் பொழுது ஏற்பட்ட தோல்வி இந்தியா முழுவதும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் சந்திராயன்-2 கொடுத்த பாடங்களின் அடிப்படையில் பிழைகள் சீர் செய்யப்பட்டிருப்பதால் சந்திராயன்-3 வெற்றிகரமாகத் தரையிறக்கப்படும் என இஸ்ரோ நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் நடிகர் பிரகாஷ் ராஜ் அவருடைய டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு ஒன்று சர்ச்சைக்குரியதாக மாறி வருகிறது. அதில் 'விக்ரம் லேண்டரால் எடுக்கப்பட்ட முதல் புகைப்படம் தற்போது வந்துள்ளது' எனப் பகிர்ந்துள்ளார். அதில் நபர் ஒருவர் டீ ஆற்றுவது போன்ற கார்ட்டூன் புகைப்படம் இடம் பெற்றுள்ளது.
BREAKING NEWS:-
— Prakash Raj (@prakashraaj) August 20, 2023
First picture coming from the Moon by #VikramLander Wowww #justasking pic.twitter.com/RNy7zmSp3G