பொதுத்துறை வங்கிகள் மற்றும் அரசு நிறுவனங்களின் அனைத்துத் துறைகளிலும் ஊழலை ஒழிக்கவும், வேலை செய்யாதவர்களைக் கண்டுபிடித்து நீக்கவும், ஊழியர்களின் பணித்திறன், பணிக்காலம் ஆகியவற்றை ஆய்வு செய்யவும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய பணியாளர் துறை அமைச்சகம் அனைத்து அரசுத்துறை செயலாளர்களுக்கும், கடிதம் எழுதியுள்ளது. அதன்படி அனைத்துத் துறைகளின் செயலாளர்களும் தங்கள் துறையில் பணியாற்றும் ஊழியர்களின் பணித்திறன், மற்றும் பணிக்காலம் ஆகியவை குறித்து சட்டத்துக்கு உட்பட்டு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஆய்வு செய்ய வேண்டும். ஒரு ஊழியரின் பணி சரியில்லை என்று அவரை ஓய்வுபெறச் செய்ய உத்தரவிடும்போது அது தன்னிச்சையாக பிறப்பிக்கும் உத்தரவாக இல்லாமல், அதற்கான உறுதியான காரணம் இருக்கிறது என்பதை உறுதி செய்ய வேண்டும்.
இந்த நடவடிக்கையில் ஒரு ஊழியரை அவரின் பணிக் காலத்துக்கு முன்பாக ஓய்வுபெறச் செய்வது பொதுநலன் கருதிதான் என்பதையும், ஒரு ஊழியரைப் பிடிக்காவிட்டால், அவரின் உயரதிகாரி தன்னிச்சையான முறையில் எந்த முடிவுகளையும் எடுக்கவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும். அதற்கான தகுந்த ஆதாரங்கள், ஆவணங்களையும் அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.