5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் நேற்று வெளியான நிலையில் காங்கிரஸ் கட்சி 3 மாநிலங்களில் ஆட்சியை கைப்பற்றியது. இதனையடுத்து பல்வேறு தலைவர்களும் பிரபலங்களும் இந்த தேர்தல் குறித்தான தங்கள் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் கட்சியின் வீரப்ப மொய்லி, 'பிரதமர் நரேந்திர மோடியின் தவறான மற்றும் மோசமான நிர்வாகத்தை மக்கள் நீண்டகாலமாகப் பொறுத்திருந்தனர். இந்த 5 மாநிலத் தேர்தல் முடிவுகள் அனைத்தும் மத்திய அரசு மீதான மக்களின் வெறுப்பின் அடையாளமாகவே பார்க்கப்படுகிறது. தேர்தல் பிரசாரத்தின் போது பாஜகவினர், சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி மீது தனிப்பட்ட அவமதிப்பு பரப்புரைகளை மேற்கொண்டனர். இதை மக்கள் தாங்கிக்கொள்ளவில்லை. மேலும் இந்த வெற்றி மூலம் 2019-ம் ஆண்டு நடக்கும் மக்களவைத் தேர்தலுக்கு பின் ராகுல் காந்தி பிரதமராக உருவாகுவார் என்பதைத் தெரிவிக்கிறது. ராகுல் காந்தி கடினமாக உழைக்கும் விதம், பொறுமை ஆகியவற்றின் பலனே இந்தத் தேர்தலில் கிடைத்துள்ளது. தலைமைப்பண்புகளுக்கு உரிய அனைத்து விதமான தேர்வுகளிலும் ராகுல் காந்தி பாஸாகிவிட்டார். மக்கள் பிரதமர் நரேந்திர மோடியைக் காட்டிலும் சிறந்த தலைவராகவே ராகுல் காந்தியை பார்க்கிறார்கள்' என கூறினார்.