இந்தியாவில் ரயில் சேவை தொடங்கி ஏறக்குறைய 170 வருடங்கள் நிறைவுபெற உள்ளது. நூற்றுக்கணக்கான ரயில்களை இந்திய ரயில்வே பல்வேறு வழித்தடங்களில் இயக்கி வருகிறது. முதல் ரயில் மும்பை மற்றும் தானே இடையே 34 கி.மீ தூரத்துக்கு இயக்கப்பட்ட அந்தக் காலத்தில் தொடங்கி, இன்று காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை நீண்ட தூர ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றது. இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமாக இன்றுவரை இருந்து வருகிறது.
ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வரும் ரயில்வே துறைக்கு என்று பல வருடம் தனி பட்ஜெட் போடப்பட்டு வந்த நிலையில் சில ஆண்டுகளாக அது நிறுத்தப்பட்டது. இந்நிலையில் இந்தியாவின் புல்லட் ரயில் என்று அழைக்கப்படும் வந்தே பாரத் ரயில் தொடர்பாகக் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்துள்ள மத்திய அமைச்சர், இதுவரை நாடுமுழுவதும் வந்தே பாரத் ரயில் 68 முறை விலங்குகள் மோதியதில் விபத்துக்குள்ளாகி இருக்கிறது என்றும், ஒருமுறை பிரேக் கோளாறு ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.