நாடாளுமன்றத்தில் குடியுரிமை திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு இரண்டு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி இந்த மசோதா சட்டமாக்கப்பட்டது.
இதுதொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், டெல்லி உள்ளிட்ட நாட்டின் பல முக்கிய பகுதிகளிலும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் நேற்று உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோ, புலந்த்ஷெகர், கான்பூர், கோரக்பூர் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணிகள் நடைபெற்றன. லக்னோவில் 144 தடை அமலில் உள்ள நிலையில், தடையையும் மீறி நூற்றுக்கணக்கானோர் அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
முஸாபர்நகர், லக்னோ, மீரட், கோரக்பூர், புலந்த்ஷெகர் நகர், பெரோஷாபாத், வாரணாசி, மதுரா என அம்மாநிலம் முழுவதும் கலவரங்கள் ஏற்பட்டன. மாநிலம் முழுவதும் சுமார் 3,000 பேர் கைது செய்யப்பட்டனர். 15 மாவட்டங்களில் இணைய சேவை 45 மணி நேரத்துக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில் உத்தரபிரதேசத்தின் பல்வேறு நகரங்களில் நடைபெற்ற வன்முறை சம்பவங்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 3 பேர் துப்பாக்கிச்சூட்டில் பலியாகியுள்ளனர். மற்றவர்கள் வன்முறையில் சிக்கி உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளனர்.