உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் ஆல்கஹால் கலந்த கிருமிநாசினியால் தர்காவைச் சுத்தம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
கரோனா பாதிப்பு குறைந்துள்ள பகுதிகளில் ஊரடங்கு தளர்வுகள் அமல்படுத்தப்பட்டு வரும் சூழலில், வழிபாட்டுத் தலங்களைத் திறக்க அண்மையில் அனுமதி வழங்கப்பட்டது. சமூக இடைவெளியைப் பின்பற்றுவது, வழிபாட்டுப் பகுதிகளைக் கிருமிநாசினிகள் மூலம் சுத்தப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு வழிகாட்டுதல்களும் இதுதொடர்பாக வழிபாட்டுத் தலங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், கடந்த வாரம், மதுராவின் புகழ் பெற்ற கிருஷ்ணன் கோயில்களான இஸ்கான், பாங்கே பிஹாரி, போபாலின் மா வைஷ்ணோவதம் நவ்துர்கா கோயில் ஆகியவற்றில் ஆல்கஹால் கலந்த கிருமிநாசினிகளைப் பயன்படுத்தி வழிபாட்டுப் பகுதிகளைச் சுத்தம் செய்ய எதிர்ப்பு எழுந்தது. இதனையடுத்து இந்தக் கோயில்களில் ஆல்கஹால் இல்லாத கிருமிநாசினிகளைக் கொண்டு சுத்தப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தச் சூழலில், உத்தரபிரதேசத்தின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள ஆலா ஹசரத் தர்காவிலும் ஆல்கஹால் கலந்த கிருமிநாசினிகளைப் பயன்படுத்தி வழிபாட்டுப் பகுதிகளைச் சுத்தம் செய்ய எதிர்ப்பு எழுந்துள்ளது. போதை தரும் ஆல்கஹாலை பயன்படுத்துவது இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டுள்ளதால், இந்த எதிர்ப்பு எழுந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.