இந்தியாவில் நாளுக்கு நாள் கரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் மத்திய அரசு பொதுமுடக்கம் அறிவித்ததில் இருந்து பல்வேறு தளர்வுகளையும் அவ்வப்போது அறிவித்து வருகிறது. இந்நிலையில் நான்காம் கட்ட பொதுமுடக்க அதிரடி தளர்வுகளை தற்போது மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
அதன்படி, செப்டம்பர் 7-ஆம் தேதி முதல் நாடு முழுவதும் மெட்ரோ ரயில் சேவைகள் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 21 முதல் 100 பேர் வரை ஒன்றுகூடி நிகழ்ச்சிகளில் பங்கேற்க அனுமதி வழங்கப்படுகிறது. அதேபோல் செப்டம்பர் 21 -ஆம் தேதி முதல் அரசியல், விளையாட்டு, கலாச்சாரம் மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் 100 பேர் வரை பங்கேற்கலாம். செப்டம்பர் 30-ஆம் தேதி வரை பள்ளிகள், கல்லூரிகள், கல்வி நிலையங்கள் என அனைத்தும் மூடப்பட்டிருக்கும். வெளிநாட்டு விமான சேவைகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை தொடர்ந்து நீட்டிக்கப்படுகிறது. மாநிலம் விட்டு மாநிலம் செல்ல அனுமதி அளிக்கப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 21 முதல் திறந்தவெளி திரையரங்குகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 21 -க்கு பிறகு ஆன்லைன் வகுப்புகள் நடத்த 50 சதவீத ஆசிரியர்கள், பணியாளர்களை பள்ளிக்கு அழைக்கலாம். 9 முதல் 12 -ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் பெற்றோரின் அனுமதியுடன் பள்ளிக்கு வரலாம் எனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.