உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகள், மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஸ் மிஸ்ராவுக்கு கறுப்புக்கொடி காட்ட முயன்றனர். அப்போது ஆஷிஸ் மிஸ்ராவின் கார் மோதியதில் 4 விவசாயிகள் இறந்ததாகக் கூறப்படுகிறது. மேலும் ஆஷிஸ் மிஸ்ரா, விவசாயி ஒருவரைத் துப்பாக்கியால் சுட்டதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து, விவசாயிகள் போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இந்த வன்முறையில் பத்திரிகையாளர் உட்பட மேலும் நான்கு பேர் உயிரிழந்தனர்.
இந்த வன்முறை தொடர்பாக ஆஷிஸ் மிஸ்ரா மற்றும் அவரது ஆதரவாளர்கள் என 14 பேர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து ஆஷிஸ் மிஸ்ராவின் ஆதரவாளர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர். மேலும் நேற்றைய தினம் (08.10.2021), விசாரணைக்கு ஆஜராகுமாறு ஆஷிஸ் மிஸ்ராவிக்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் அவர் நேற்று விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதனையடுத்து அவருக்கு மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டது.
இதனிடையே, ஆஷிஸ் மிஸ்ரா நேபாளத்திற்கு தப்பி ஓடிவிட்டதாக சந்தேகிப்பதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. ஆனால் இதனை மறுத்த மத்திய இணையமைச்சர் அஜய் மிஸ்ரா, தனது மகனுக்கு உடல்நலம் சரியில்லாததால் இன்று விசாரணைக்கு ஆஜராகவில்லை என்றும், நாளை விசாரணைக்கு ஆஜராவார் என்றும் நேற்று கூறியிருந்தார். இந்தநிலையில் ஆஷிஸ் மிஸ்ரா இன்று காவல்துறை விசாரணைக்கு ஆஜராகியுள்ளார்.
இதற்கு முன்னதாக நேற்று லக்கிம்பூர் வன்முறை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்றது. அப்போது உத்தரப்பிரதேச அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ஆஷிஷ் மிஸ்ராவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகவும், அவர் ஆஜராக நாளை காலை 11 மணிவரை அவகாசம் வழங்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார். இதற்கு கடும் அதிருப்தியை தெரிவித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், மற்ற குற்றஞ்சாட்டப்பட்டவர்களையும் இப்படித்தான் நடத்துகிறோமா? என கேள்வி எழுப்பினர். மேலும், மரணம், துப்பாக்கிச் சூடு போன்ற குற்றச்சாட்டுகள் இருக்கும்போது, அதுதொடர்பாக குற்றஞ்சாட்டப்பட்டவர்களும் நம் நாட்டில் இதேபோல்தான் நடத்தப்படுவார்களா? என கேள்வியெழுப்பியதோடு, 302வது சட்டப்பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டால் குற்றஞ்சட்டப்பட்டவர் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் எனவும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.