ஆந்திர மாநிலத்தின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி பதவியேற்பு முன்பு பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து தமது பதவியேற்பு விழாவிற்கு வருமாறு அழைப்பு விடுத்தார். அப்போது ஆந்திர மாநில வளர்ச்சிக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும் என ஜெகனுக்கு பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்தார். ஜெகன் மோகன் ரெட்டி பதவியேற்க இருந்த அதே நாளில் அன்று மாலை பிரதமராக நரேந்திர மோடி பதவி ஏற்க இருந்ததால், ஜெகன் மோகன் ரெட்டி பதவி ஏற்பு விழாவில் பிரதமர் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை மந்திரி ராம்தாஸ் அத்வாலே, தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நேற்று நடந்த இப்தார் விருந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி மற்றும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிகள் இணைய வேண்டும் என அழைப்பு விடுத்தார். இது தொடர்பாக அவர் கூறுகையில், ‘பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு போதுமான பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்து உள்ளது. தங்கள் மாநில வளர்ச்சிக்காக தெலுங்கானா, ஆந்திரா முதல்-மந்திரிகள் முறையே சந்திரசேகர் ராவ், ஜெகன்மோகன் ரெட்டி இருவரும் இந்த கூட்டணியில் இணைய வேண்டும் என தனிப்பட்ட முறையில் பரிந்துரைக்கிறேன்’ என்று தெரிவித்தார். ஆந்திர மாநிலம் மட்டுமல்லாமல் மற்ற மாநிலங்களும் " சிறப்பு அந்தஸ்தை" கோருவதால் ஆந்திரா மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்தை தற்போது வழங்குவது கடினம் என மத்தியமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தெரிவித்தார்.