மக்களவை தேர்தல் இந்தியா முழுவதும் மே 19 வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்ட தேர்தல் முடிந்த நிலையில், 7 கட்ட தேர்தலும் முடிந்த பிறகு மே 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலத்தின் ஜான்சி பகுதியில் நேற்று பாஜக வின் மூத்த தலைவர் உமா பாரதி ஜான்சியில் போட்டியிடும் பாஜக வேட்பாளரான அனுராக் சர்மாவுக்காக வாக்கு சேகரித்தார்.
அதன்பின் செய்தியாளர்களை பேசிய அவர், "அனுமன், சே குவேரா, வீர சிவாஜி ஆகியோரின் கொள்கைகளால் நான் ஈர்க்கப்பட்டேன். அதனால்தான் நான் இந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்று அறிவித்தேன். அதுபோலவே அத்வானி, மோடி, யோகி ஆதித்யநாத் ஆகியோராலும் நான் ஈர்க்கப்பட்டேன். உ.பி.யில் யோகி ஆதித்யநாத் மிகச் சிறப்பாக பணியாற்றி வருகிறார். பிரதமர் மோடியின் இளைய அவதாரமாகத் யோகி ஆதித்யநாத் திகழ்கிறார். இந்தத் தேர்தலில் போட்டியிடாமல் கங்கை புனரமைப்புத் திட்டத்துக்காக நான் பணியாற்றப் போகிறேன். அதே நேரத்தில் 2022 உத்தரபிரதேச சட்டப்பேரவை தேர்தலில் நான் போட்டியிட மாட்டேன் என்றும் சொல்லவில்லை" என அவர் கூறினார்.