Skip to main content

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடங்கிய சில மணி நேரங்களில் இந்திய பொருளாதாரத்தில் ஏற்பட்ட தாக்கம்!

Published on 24/02/2022 | Edited on 24/02/2022

 

ukraine and russia issues india economic

 

ரஷ்யாவிற்கும், உக்ரைனுக்கும் இடையேயான போர் பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வந்தநிலையில், இன்று (24/02/2022) காலை உக்ரைனை தாக்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவிட்டுள்ளார்.  மேலும் அவர், உக்ரைன் இராணுவத்தினர் தங்கள் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு சரணடைய வேண்டும் எனவும், உக்ரைன் பிரச்சனையில் வெளிநாடுகள் தலையிட்டால், இதற்கு முன் சந்தித்திராத அளவிற்கு பின்விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் எச்சரிக்கை விடுத்தார்.

 

ரஷ்ய அதிபரின் உத்தரவைத் தொடர்ந்து, உக்ரைன் நாட்டின் தலைநகர் கீவ், கிழக்கு உக்ரைனில் உள்ள டோனஸ்க்கை தாக்கி வருகிறது. ஒடேசா, கார்கிவ், மைக்கோல், மரியுபோல் உள்ளிட்ட முக்கிய நகரங்களையும் ரஷ்யா தாக்கி வருகிறது. குறிப்பாக, உக்ரைன் நாட்டில் விமான நிலையங்கள், துறைமுகங்களை கைப்பற்றும் முனைப்பில் தீவிரம் காட்டி வருகிறது ரஷ்ய ராணுவம். 

 

உக்ரைன் மீது ரஷ்ய தாக்குதல் நடத்தி வருவது சர்வதேச சந்தையில் மட்டுமின்றி இந்திய பொருளாதாரத்திலும்  பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் ஒரு பேரலின் விலை 100 டாலர்களாக உயர்ந்துள்ளது. சுமார் 8 ஆண்டுகளுக்கு பிறகு கச்சா எண்ணெய் விலை மீண்டும் 100 டாலரைத் தொட்டது. கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததையடுத்து, இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

 

அதேபோல், இந்திய பங்குச் சந்தைகளில் கடும் சரிவைச் சந்தித்துள்ளது. மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 2,000 புள்ளிகளும், தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 600 புள்ளிகளும் சரிந்து வர்த்தகமாகி வருகிறது. பங்குச்சந்தைகள் சரிவால் முதலீட்டாளர்களுக்கு சில லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக தகவல் கூறுகின்றன. மேலும், போர் காரணமாக முதலீட்டாளர்கள் அச்சமடைந்து தங்கள் முதலீடுகளை வெளியே எடுக்கின்றனர். 

 

தங்கம் மற்றும் வெள்ளியின் விலையும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 864 உயர்ந்து ரூபாய் 38,616 விற்பனையாகி வருகிறது. அதேபோல், வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு ரூபாய் 1.90 காசுகள் உயர்ந்து ரூபாய் 70.60- க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

 

போர் தொடங்கிய சில மணி நேரங்களில் இந்திய பொருளாதாரத்தில் பெருத்த தாக்கம் ஏற்படுத்தியுள்ள நிலையில், போர் தொடர்ந்து நீடித்தால் இந்திய பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கும் என்று பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.   

 

 

சார்ந்த செய்திகள்