மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே மே 21 அன்று நடைபெறவுள்ள மாநில சட்டமேலவை தேர்தலுக்கான வேட்பு மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.
சட்டசபைத் தேர்தலில் போட்டியிடாத உத்தவ் தாக்கரே, நேரடியாக மகாராஷ்ட்ரா முதல்வர் ஆனதால், அடுத்த ஆறு மாதத்திற்குள் சட்டசபை உறுப்பினர் அல்லது மேலவை உறுப்பினர் ஆகவேண்டும் என்ற கட்டாயம் அவருக்கு உருவானது. அம்மாநிலத்தில் இரண்டு சட்டசபை தொகுதிகள் காலியாக உள்ளதால், அதில் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட்டு சட்டசபை உறுப்பினராகத் திட்டமிட்டிருந்தார் உத்தவ் தாக்கரே. இதற்கான தேர்தல் தேதியையும் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
இந்நிலையில், கரோனா பரவல் காரணமாகத் தற்போது இந்தத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ள சூழலில், இந்த மாதத்திற்குள் சட்டசபை உறுப்பினர் அல்லது மேலவை உறுப்பினர் ஆகவேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டது. இப்போதைய சூழலில், ஒரு மாதத்திற்குள் தேர்தல் நடைபெற வாய்ப்பில்லை என்பதால், மேலவை உறுப்பினராக முடிவெடுத்த அவர் அதற்கான அமைச்சரவை பரிந்துரையையும் ஆளுநருக்கு அனுப்பிவைத்தார். ஆனால், ஆளுநர் தரப்பிலிருந்து இதற்கு எந்தப் பதிலும் வராத நிலையில், இந்த விவகாரத்தில் பிரதமர் மோடியின் உதவியை நாடினார் உத்தவ் தாக்கரே.
இதனையடுத்து மே 21 அன்று சட்டமேலவை தேர்தலை நடத்திக்கொள்ள ஆளுநரும், தேர்தல் ஆணையமும் அனுமதியளித்தது. இதனையடுத்து இன்று இந்தத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை உத்தவ் தாக்கரே தாக்கல் செய்தார். இந்தப் பதவிக்கு வேறு யாரும் போட்டியிடாததால், உத்தவ் தாக்கரே போட்டியின்றி தேர்வு செய்யப்பட உள்ளார்.