திருப்பதி என்றாலே லட்டும், மொட்டையும்தான் நமது நினைவுக்கு வரும். நாடு முழுவதும் பிரபலமான திருப்பதி லட்டு முன்பு கைக்குள் அடங்காத அளவில் பெரிதாக இருக்கும். இப்போது லட்டின் அளவு குறைந்த காணப்பட்டாலும், ஒரு லட்டு தயாரிக்க ரூ. 40 செலவாகிறது எனத் தேவஸ்தான அதிகாரிகள் கூறுகிறார்.
திருப்பதி கோயிலுக்கு மலை அடிவாரத்திலிருந்து பாதயாத்திரையாகவும், வாகனங்களிலும் பக்தர்கள் செல்கிறார்கள். இவர்கள் சாமி தரிசனம் செய்ய இலவச தரிசனம், சர்வதேச தரிசனம், திவ்ய தரிசனம் என 3 பிரிவுகளின் கீழ் பிரிக்கப்படுகிறார்கள். இவர்கள் சாமி தரிசனம் செய்த பிறகு, சலுகை விலையில் நபர் ஒருவருக்கு 4 லட்டுகள் ரூ. 70க்கு வழங்கப்பட்டு வருகிறது. இப்படி லட்டுகள் சலுகை விலையில் வழங்கப்படுவதால், ரூ. 200 கோடி நஷ்டம் ஏற்படுவதாக, தேவஸ்தானம் கூறியுள்ளது. இதனால், இனி வரும் நாட்களில் சாமி தரிசனம் செய்யும் ஒருவருக்கு ஒரு லட்டு இலவசமாக வழங்கிவிட்டு, கூடுதலாகப் பக்தர்களுக்குத் தேவைப்படும் லட்டுகளுக்கு ரூ. 50 வசூலிக்கத் தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. இதன்படி, பக்தர் ஒருவர் தனக்கு எத்தனை லட்டுகள் வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம்.