கேரள மாநிலம் திருவனந்தபுரம் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுவன் ஒருவன் போதை பழக்கத்திற்கு அடிமையாக இருந்த நிலையில் வழக்கம் போல் வீட்டிலேயே போதை பொருட்களை பயன்படுத்தி வந்ததுடன் வீட்டில் உள்ளவர்களிடமும் போதையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் சிறுவன் தனது தாயிடம் பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். இதனைக் கண்டித்த தனது தாயாருடனும் வாக்குவாதம் செய்துள்ளார். மேலும், வீட்டில் இருந்த பொருட்களையும் அடித்து உடைத்து சேதப்படுத்தி உள்ளார்.
நடந்த இந்த சம்பவம் குறித்து சிறுவனின் தாயார் போலீசிடம் புகார் அளித்துள்ளார். இதைத் தொடர்ந்து போலீஸ் அந்த சிறுவனை பிடித்து சிறார் நீதிமன்ற மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்த வேண்டிய நிலையில், அன்று இரவு 10 மணியை கடந்துவிட்டதால் சிறுவனை சம்பந்தப்பட்ட பெண் நீதிபதி வீட்டிற்கு கொண்டு சென்று ஆஜர்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து வீட்டில் இந்த வழக்கு குறித்து பெண் நீதிபதி விசாரித்த போது யாரும் எதிர்பாரா வகையில் திடீரென சிறுவன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து நீதிபதியை நோக்கி குத்த முயன்றுள்ளார். சிறுவனின் இந்த செயலை கண்ட பெண் நீதிபதி மற்றும் சிறுவனின் தாயார் ஆகியோர் அதிர்ச்சி அடைந்து அலறி உள்ளனர். இவர்களின் அலறல் சத்தம் கேட்டு அங்கு பாதுகாப்புக்காக வந்த போலீசார் உடனடியாக சிறுவனிடம் இருந்த கத்தியை பறிமுதல் செய்தனர்.
கேரளாவில் உள்ள கொட்டாரக்கரா அரசு தலைமை மருத்துவமனை ஒன்றில் கைதிக்கு சிகிச்சை அளித்த பெண் பயிற்சி மருத்துவர் ஒருவர் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்திய நிலையில், சிறுவனின் இந்த செயல் தற்போது கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.