Skip to main content

பாம்பை ஏவி விட்டு மனைவி கொலை... பரபரப்பைக் கிளப்பிய கேரள போலீசாரின் சோதனை வீடியோ!

Published on 30/08/2021 | Edited on 30/08/2021

 

Test video of Kerala police causing a stir!

 

குற்ற வரலாற்றில் தேசத்தில் இதுவரை நடந்திராத பரீட்சார்த்தமான சோதனை நடத்திய கேரள போலீசார், அதில் சாதித்துமிருப்பதுதான் கேரளத்தில் பரபரப்புப் பேச்சாகியிருக்கிறது.

 

கொல்லம் மாவட்டத்தின் அஞ்சல் பகுதியைச் சேர்ந்த ரப்பர் எஸ்டேட் ஓனரும் திரண்ட சொத்துக்களைக் கொண்டவருமான விஜயசேனன். சற்று குறைபாடுள்ள தனது ஒரே மகள் உத்ராவை பத்தனம்திட்டா அரூர் பகுதியில் இருக்கும் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவரும் வங்கி ஒன்றில் கான்ட்ராக்ட் தொழிலாளியாக இருக்கும் சூரஜ் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்திருக்கிறார். திருமணத்திற்கு முன்பே தனது மகளின் குறைபாடு பற்றி சூரஜின் குடும்பத்தாரிடம் தெளிவாக தெரியப்படுத்தியப் பிறகு தான் அவர்களின் சம்மதத்தோடு திருமணத்தை நடத்தியிருக்கிறார். திருமணத்தின்போது 5 லட்சம் ரொக்கம், 70 சென்ட் நிலம், கார் மற்றும் சூரஜின் தங்கையின் படிப்பிற்கான முழுச் செலவு, அவரது தந்தை பிழைப்பின் பொருட்டு ஆட்டோ ஒன்று என்று வரதட்சணையாக வாரிக் கொட்டியிருக்கிறார் விஜயசேனன். இத்தனை சொத்துக்களையும் அடைந்த சூரஜின் மனதிலோ வேறு ஒரு எண்ணம். லௌகீகத்தில், தாம்பத்ய உறவில் அத்தனை ஈடுபாடு இல்லாதவள் உத்ரா. அதில் அவளின் ஒத்துழைப்பு இல்லை. இதனால் ஆத்திரமான சூரஜ் திருமணான சில மாதங்களுக்குப் பிறகு விபரீத முடிவு எடுத்திருக்கிறார்.

 

Test video of Kerala police causing a stir!

 

பாம்பை ஏவி விட்டு மனைவி உத்ராவை கடிக்க வைத்து கொன்ற பின்பு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ளலாம், திரண்ட சொத்துக்களையும் அனுபவிக்கலாம் என்ற நோக்கத்தில் சூரஜ் பிப்ரவரி 15, 2020 அன்று தனது வீட்டில் வைத்து இரவு நேரம் பாம்பை விட்டுக் கடிக்க வைத்திருக்கிறான். அதில் பாம்பு கடிபட்ட உத்ரா சிகிச்சையில் ஓரளவு தேறிய பின்பு அஞ்சலில் உள்ள பெற்றோரின் பராமரிப்பில் இருந்திருக்கிறார். பாம்புக்கடியின் வீரியத்தால் அரை மயக்கத்திலேயே இருந்திருக்கிறார். சூரஜின் வீட்டில் இந்த சம்பவம் எப்படி நடந்தது என்று உத்ராவின் பெற்றோருக்கு அப்போது தெரியாமல் இருந்திருக்கிறது. இரண்டாம் முறையாக விஷத்தன்மை கொண்ட பாம்புடன் உத்ராவின் வீட்டிற்கே போன சூரஜ் இரவு அங்கே தங்கியிருக்கிறார். ஏசி ரூமில் தனி அறையில் சூரஜ் மற்றும் உத்ரா இருவருமே இருந்திருக்கின்றனர். இரவு நேரம் அரை மயக்கத்திலிருந்த உத்ரா கண்ணயர்ந்திருக்கிறார். அது சமயம் திட்டப்படி விஷத்தன்மையுள்ள கொடிய பாம்பை சீண்டி விட்டு கடிக்க விட்டிருக்கிறார் சூரஜ். பாம்பின் கடி பொறுக்க மாட்டாமல் அனத்திய உத்ராவை கண்டு பதறிய பெற்றோர்கள் அவளைச் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி உத்ரா மரணமடைய அதன் பிறகே உத்ராவின் பெற்றோர்களுக்கு சூரஜால் ஏவிவிடப்பட்ட பாம்பு தான் தங்களின் மகளைக் கொத்தியிருக்கிறது என்பதை அறிந்து அதிர்ந்தவர்கள் முறையாக கொல்லம் காவல் நிலையத்தில் புகார் செய்திருக்கிறார்கள். அதையடுத்து நடந்த போலீசின் விசாரணையின் போது சூரஜின் திட்டமும் ஏற்கனவே அவன் பாம்பை ஏவி விட்டு உத்ராவை கடிக்க விட்ட சம்பவம் உட்பட அனைத்தையும் அவன் ஒப்புக் கொண்ட பிறகே போலீசார் சூரஜைக் கைது செய்திருக்கிறார்கள்.

 

Test video of Kerala police causing a stir!

 

மொத்த சொத்துக்களையும் அடைய, மறுமணத்திற்காக கட்டிய மனைவியின் மீது பாம்பை ஏவிவிட்டு கொத்தவைத்து நடத்தப்பட்ட இந்தக் கொலைச் சம்பவம் 05.05.2020ன் போது கேரளாவையே உலுக்கியது. அது சமயம் இது குறித்து நக்கீரனில் விரிவாகவே வெளியிட்டிருந்தோம். இந்த வழக்கில் தற்போது போலீசாரால் நடத்தப்பட்ட பரிட்சார்த்தமான சோதனைதான் பரபரப்பை கிளப்பியிருக்கிறது.

 

Test video of Kerala police causing a stir!

 

இந்த பாம்புக் கடி கொலை வழக்கில் கொல்லம் ரூரல் எஸ்.பி.யான ஹரிசங்கர் கொலையாளிக்கு தண்டனை வாங்கித்தரவேண்டுமென்று தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார். சம்பவம் தொடர்பாக பல மெட்டீரியல் எவிடென்ஸ்கள் போலீசாரால் சேகரிக்கப்பட்டாலும் பாம்பை ஏவியது சூரஜ்தான் என்பதற்கான சாட்சி அவர்களிடம் இல்லை. ஆனால் சம்பவத்தின்போது உத்ராவுடன் சூரஜ் மட்டும்தான் இருந்ததை சாட்சிகளோடு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இந்தக் கொலை சம்பவத்திற்காக சூரஜ் ஐந்து வயதுடைய 0.6 செ.மீ உயரமுள்ள பற்களைக் கொண்டதும் 152 செ.மீ நீளமுள்ள விஷப்பாம்பை சுரேஷ் என்பவரிடமிருந்து வாங்கியிருக்கிறான் என்கிறார்கள் கொல்லம் போலீசார். இந்த வழக்கில் நடந்ததை உறுதிப்படுத்த மாறுபட்ட முறையில் கட்டிலில் படுத்திருந்த பெண்ணை பாம்பு எவ்வாறு கடித்திருக்கும் என்பதை சோதனை செய்து பார்க்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்கள் கொல்லம் போலீசார். இதற்காக கொல்லம் ரூரல் க்ரைம் பிரான்ஜ்ச் டி.ஒய்.எஸ்.பி. அசோகன் தலைமையிலான போலீசார், வனத்துறையினர் மற்றும் பாம்பு ஆராய்ச்சியாளரான மவீஷ் குமார் உள்ளிட்ட குழுவினர் இந்த சோதனையில் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்கள் பாம்பை ஏவி விட்டு சூரஜ் எப்படி பண்ணியிருப்பான் என்பதையறிய சோதனையாக இப்படி செட் பண்ணியிருக்கிறார்கள்.

 

Test video of Kerala police causing a stir!

 

உத்ரா படுத்திருந்த ரூமைப் போன்று ஒரு இடத்தில் தனியாக ரூம் செட் செய்து அதில் கட்டிலும் போடப்பட்டது. உத்ரா போன்ற உயரம் கொண்ட உரு பொம்மை உருவாக்கப்பட்டு அதன் கைகளில் கோழிச் சதையை இணைத்துக் கட்டியிருக்கிறார்கள். ஒரிஜினல் விஷப் பாம்பைக் கொண்டு வந்தவர்கள் அதன் பற்களின் உயரங்களை முதலில் அளவெடுத்துக் கொண்டனர். பின்பு அந்தப்பாம்பை சாதாரணமாக பொம்மை மீது விட்டுக் கடிக்க விட்டிருக்கிறார்கள். இயல்பாகவும் சாதாரண நிலையில் இருக்கும் பாம்பு, ஒருவரை எவ்வாறு கொத்துமோ அது போன்று பொம்மையின் கையில் கொத்தியிருக்கிறது. உடனே அந்தக் கடிக் காயத்தின் தன்மை, ஆழம் மற்றும் டெப்த் போன்றவைகளை மார்க் செய்திருக்கிறார்கள். அதன் பின் அந்தப் பாம்பைச் சீண்டி ஆத்திரமடையச் செய்து ஆத்திரப்பட்டப்  பின் கடிக்க விட்டபோது அந்த ஆக்ரோஷத்தில் பாம்பு பொம்மையின் கையில் பலமாகக் கொத்தியிருக்கிறது. அதன் பின் கொத்தப்பட்டக் கடிக் காயத்தின் தன்மை, காயத்தின் ஆழம், டெப்த் போன்றவைகளை மார்க் செய்திருக்கிறார்கள். இரண்டையும் மார்க் செய்ததில் விஷப் பாம்பை நோக வைத்து சீண்டிய பின்பு அது கொத்தியதைப் போன்ற காயமும் ஆழமும், டெப்தின் அளவும் உத்ராவின் கைகளில் பதிந்திருந்ததோடு ஒத்துப்போயிருக்கிறது. அதன் பின் இந்த ஆய்வின் அறிக்கையையும், வீடியோ ஆதாரத்தையும் கோர்ட்டில் அறிக்கையாக தாக்கல் செய்திருக்கிறார்கள் கொல்லம் ரூரல் க்ரைம் ப்ரான்ஜ்ச் போலீசார்.

 

Test video of Kerala police causing a stir!

 

நீதிமன்றத்தில் அறிக்கையாக தாக்கல் செய்யப்பட்ட இந்த வீடியோ ஆதாரம் பல மாதங்களுக்குப் பின்பு தற்போது போலீசாரால் வெளியிடப்பட்டதுதான் வைரலாகி கேரளாவையே பரபரப்பாக திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது.  இது மாதிரியான சோதனை சம்பவம் ஒரு புதிய விஷயம். தேசத்தில் குற்ற வரலாற்றில் வேறு எங்கும் இது போன்றதொரு பரிட்சார்த்தமான சோதனை நடத்தபட்டதில்லை என்கிறார்கள் கேரள போலீசார். கிரிமினல் குற்றங்கள் தொடர்பான வழக்குகளில் மூளையைக் கசக்கினால் நிச்சயம் அதற்கு ஆணித்தரமான ஆதாரம் கிடைக்கும். பலனும் இருக்கும். என்கிறார்கள் கொல்லம் ரூரல் க்ரைம் பிரான்ஜ்ச் போலீசார். கடவுளின் தேசத்தின் ஹாட் டாப்பிக் இதுதான்.

 

 

 

சார்ந்த செய்திகள்