கர்நாடக மாநில முதல்வராக பதவியேற்ற எடியூரப்பா, முதல் கையெழுத்தாக ரூ.56 ஆயிரம் கோடி விவசாயக் கடனை தள்ளுபடி செய்து பணியை தொடங்கினார்.
கர்நாடக சட்டசபை தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆட்சி அமைக்க பெரும்பான்மை கிடைக்காததால், இழுபறி நிலை ஏற்பட்டது. இதையடுத்து பாஜகவும், காங்கிரஸ் - மதசார்பற்ற ஜனதா தளமும் தனித்தனியாக ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரின. ஆனால், ஆளுநர் வஜுபாய் வாலா பாஜகவின் எடியூரப்பாவை ஆட்சியமைக்க அழைப்பு விடுத்தார்.
எடியூரப்பாவிற்கு ஆளுநர் அழைப்பு விடுத்ததற்கு எதிராக காங்கிரஸ் - மஜத கூட்டாக உச்சநீதிமன்றத்தில் நேற்று இரவு மனுத் தாக்கல் செய்தது. இந்த மனு மீதான விசாரணை நள்ளிரவு 2 மணி முதல், விசாரிக்கப்பட்டு வந்தது. நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அசோக் பூஷண், எஸ்ஏ போப்தே ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடைபெற்றது. இதில் எடியூரப்பா பதவி ஏற்பதற்கு தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது. இதைதொடர்ந்து கர்நாடகாவின் 23வது முதல்வராக எடியூரப்பா இன்று காலை பதவியேற்றார்.
இந்நிலையில், எடியூரப்பா பதவியேற்ப்புக்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், எடியூரப்பா பதவியேற்பை கண்டித்து கர்நாடக சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள காந்தி சிலை அருகே காங்கிரசார் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த பரபரப்பான சூழ்நிலைக்கு மத்தியில் தலைமைச் செயலகம் வந்து தனது பணியைத் தொடங்கினார் முதல்வர் எடியூரப்பா. முதல் கையெழுத்தாக ரூ.56 ஆயிரம் கோடி அளவுக்கு விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்யும் கோப்பில் கையெழுத்திட்டார். இதன்மூலம் விவசாயிகள் வங்கிகளில் வாங்கிய 5000 ரூபாய் முதல் 1 லட்சம் வரையிலான விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்தார்.